International Tiger Day : ”ஜூலை 29 உலக புலிகள் தினம்” : உலகளவில் இந்தியாவில் 70% புலிகள் : "Camera Trap"ல் சாதனை..!

இன்று உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், புலிகள் பாதுகாப்பில் சிறப்பான முறைகளை கையாண்டு இந்தியா சாதித்து வருகிறது.
World Tiger Day observed today, India  achieving success by employing excellent methods for tiger conservation
World Tiger Day observed today, India achieving success by employing excellent methods for tiger conservationgoogle
2 min read

உலக புலிகள் தினம்

ஆண்டுதோறும் ஜூலை 29 உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த உச்சி மாநாட்டில் இந்த நாள் உருவாக்கப்பட்டது

புலிகள் பாதுகாப்பில் இந்தியா முன்னணி

அறிவியல் பூர்வமான கொள்கைகள், வலுவான நிர்வாக அமைப்புகள் மூலம் புலிகள் பாதுகாப்பில் உலகளவில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் 70% புலிகள்

உலகின் வனப்பகுதிகளில் வாழும் ஒட்டுமொத்தப் புலிகளில் சுமார் 70 சதவீதம் இந்தியாவில் தான் வசிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் புலிகள் பாதுகாப்பாக வாழ தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருவது தான்.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி

வங்கப் புலி 1972ம் ஆண்டில் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டு, நாட்டின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் புலிகளைப் பாதுகாப்பது வனங்கள், ஆறுகள், பல்லுயிர்ப் பெருக்கம் முழுவதையும் பாதுகாப்பதோடு, கிராமப்புற, நகர்ப்புறப் பொருளாதாரத்திற்குத் தேவையான இயற்கை ஆதாரங்களையும் உறுதி செய்கிறது.

இந்தியாவில் 3,682 புலிகள்

இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2006ம் ஆண்டில் 1,411 ஆக இருந்த நிலையில், 2022-ம் ஆண்டின் அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டின்படி 3,682 ஆக இரட்டிப்பாகியுள்ளது.

20 மாநிலங்களில் புலிகள்

2022-ம் ஆண்டின் இந்த மதிப்பீடானது 20 மாநிலங்களில் 6.41 லட்சம் கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மேற்கொள்ளப்பட்ட உலகின் மிகப்பெரிய பல்லுயிர்ப் பெருக்கக் கள ஆய்வாகும்.

58 புலிகள் காப்பகங்கள்

புலிகள் பாதுகாப்பிற்காக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ‘புலிகள் திட்டம்’ மூலமாக 18 மாநிலங்களில் 58 புலிகள் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சுமார் 84,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காப்பகங்கள் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 2.56 சதவீதமாகும். இத்திட்டத்தின் செயல்பாடுகளைத் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் கண்காணித்து வருகிறது.

புலிகளை வேட்டையாட தடை

தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம், வனவிலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகிய சட்டப்பூர்வ அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

காப்பகங்களின் நிர்வாகச் செயல்பாடுகளைத் துல்லியமாக மதிப்பிடும் மேலாண்மைத் திறன் மதிப்பீட்டு அறிக்கையில் இந்தியாவின் புலிகள் காப்பகங்கள் 78 சதவீத சராசரி மதிப்பெண்களைப் பெற்றுச் சிறப்பான செயல்பட்டு வருகின்றன.

புலிகள் கண்காணிப்பில் இந்தியா சாதனை

புலிகள் கண்காணிப்புப் பணிகளில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எம்-ஸ்ட்ரைப்ஸ் என்ற மொபைல் செயலி மூலம் செயற்கைக்கோள் வரைபடம், புவியியல் இருப்பிட (ஜியோ டேக்) அடிப்படையில் களக் கண்காணிப்புத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

கேமரா டிராப் தரவு வங்கி, பகுப்பாய்வுக் கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆகியவை மூலமாகப் புலிகளின் உடலில் உள்ள தனித்துவமான கோடுகளைக் கொண்டு ஒவ்வொரு புலியும் துல்லியமாக அடையாளம் காணப்படுகிறது.

கேமிரா டிராப் - கின்னஸ் சாதனை

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் கேமரா டிராப் வனவிலங்கு கணக்கெடுப்பு முறை உலகளவில் மிகத் துல்லியமான கண்காணிப்பு அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புலியினங்கள் கூட்டமைப்பு

புலி, சிங்கம், சிறுத்தை, சிவிங்கிப்புலி, பனிச்சிறுத்தை, ஜாகுவார், பூமா ஆகிய 7 வகை புலியினங்களைப் பாதுகாப்பதற்காகச் சர்வதேச புலியினங்கள் கூட்டமைப்பு ( International Big Cat Alliance (IBCA) 2024 மார்ச் மாதத்தில் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, இதன் தலைமையகம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

புலிகள் பாதுகாப்பில் இந்தியா செலுத்தி வரும் சிறப்பான செயல்பாடுகள், உலக அளவில் புலிகளுக்கு பாதுகாப்பான இடம் இந்தியா என்பது எப்போதும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in