

VALENTINE'S DAY SPECIAL SWEET RECIPE 2026 : காதலர் தினம் வந்துவிட்டது. காதலர்கள் இந்நேரம் பரிசுகளை வாங்கி குவித்திருப்பார்கள்.
இல்லத்தரசிகளும் தங்கள் கணவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என யோசித்து, பரிசையும் வாங்கி வைத்திருப்பர்.
ஆனால் ஒருசிலர் தங்கள் கணவருக்கு ஏதாவது ஸ்பெஷலாக சமைத்து அசர வைக்க வேண்டும் என்று இந்நேரம் ரெசிபிக்களை தேடிக் கொண்டிருப்பர். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு..
சரி, காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் சூப்பரான ஸ்வீட் செய்யலாம் வாங்க..!
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - உங்கள் தேவைக்கேற்ப
டார்க் அல்லது மில்க் சாக்லேட் - 200 கிராம்
வெண்ணெய் சிறிதளவு ( மேலே தடவுவதற்கு)
பொடியாக நறுக்கிய சாக்லேட் ( உங்களுக்கு பிடித்தமான வகை)
செய்முறை:
முதலில் ஸ்ராபெர்ரி பழங்களை நன்கு கழுவி ஈரம் இல்லாமல் முழுவதுமாக துடைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
சிறிதளவு ஈரம் இருந்தாலும் சாக்லேட் சிரப்பில் ஸ்ராபெர்ரி பழங்கள் ஒட்டாது. அதனால் நன்கு துடைத்து உலரும் வரை தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.
பிறகு உங்களிடம் மைக்ரோவேவ் இருந்தால் அதை பயன்படுத்தி சாக்லேட்டை உருக வைத்துக்கொள்ளலாம். அப்படி செய்யும் போது 30 வினாடிகளுக்கு ஒருமுறை கவனமாக கிளறிவிட வேண்டும்.
மைக்ரோவேவ் இல்லாதவர்கள் கவலைபடத் தேவையில்லை. டபுல் பாய்லிங் முறையில் சாக்லேட்டை உருக வைத்துக்கொள்ளலாம்.
டபுள் பாய்லிங் முறை:
அதாவது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, கொதிக்கும் நீரின்மேல் இன்னொரு பாத்திரத்தில் சாக்லேட்டை போட்டு பொறுமையாக கிளற வேண்டும்.
கொதிக்கும் நீரின் ஆவியில் மேலே பாத்திரத்தில் உள்ள சாக்லேட் உருகத் தொடங்கும். அவ்வளவு தான் சாக்லேட் சிரப் இப்போது தயார்.
அடுத்ததாக ஸ்ராபெர்ரி பழங்களை உங்களுக்கு வேண்டும் என்றால் இதய வடிவில் கட் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஸ்ராபெர்ரி பார்ப்பதற்கு இதய வடிவில் தான் இருக்கும் .
அதனால் வேண்டுமென்றால் நிறைய இதய வடிவங்களை உருவாக்க கட் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் முழு பழமாகவும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இப்போது ஸ்ராபெர்ரி பழங்களை தயார் செய்து வைத்துள்ள சாக்லேட் சிரப்பில் முக்கி, அனைத்து பகுதியும் முழுமையாக படும்படி சுழற்றி, அதன் மேலே பொடியாக நறுக்கிய சாக்லேட் துகள்களை தூவி, அப்படியே தனித்தனியாக உலர வைத்து விடுங்கள்.
பளபளப்பாக வேண்டும் என்றால் மேற்பரப்பில் உலர்ந்தவுடன் வெண்ணெய் தடவி அதன்பிறகு சாக்லேட் துகள்களை சேர்த்துக்கொள்ளலாம்.
வண்ண வண்ண ஸ்ராபெர்ரி இதயம்
இதை தனித்தனியாகவும் வைக்கலாம். அல்லது நீங்கள் விருப்பப்பட்டால் ஒவ்வொரு பழத்தையும் ஒவ்வொரு சாக்லேட் சிரப்பில் முக்கி வண்ணமயமாக கலர், கலர் இதயமாக உங்கள் துணைக்கு காதல் பரிசாக கொடுக்கலாம்.
மனம் கவரும் பரிசு:
புளிப்பும், இனிப்பும் சேர்ந்து சுவையும் அருமையாக இருக்கும், செய்வதற்கும் எளிமையானது, வேலை நேரம் குறைவு.
எல்லாவற்றையும் விட உங்கள் காதல் கணவருக்கு உங்கள் கையாலேயே செய்த சுவையான ஸ்வீட்- ஐ காதலோடு பரிமாறலாம்.