மனித நினைவுகளையும் மாற்றும் திறன் AI கையில் : அதீத நம்பிக்கை ஆபத்து என புதிய ஆய்வுகள் எச்சரிக்கை...!

நம் நினைவுகளையும் மாற்ற வல்லமை ஏஐக்கு இருப்பதாக, புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
a new study have caused a stir by revealing that AI has the power to alter our memories
a new study have caused a stir by revealing that AI has the power to alter our memoriessource:thamizhalai,ai generated
2 min read

தகவல் திரட்டை எளிதாக்கிய AI

செயற்கை நுண்ணறிவு (AI) நமது அன்றாட வேலைகளையும் தகவல்களைத் திரட்டும் முறையை மிகவும் எளிதாக்கி இருக்கு. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து என்பதே இருக்க முடியாது.

மனித நினைவாற்றலை மாற்றும் AI

தகவல்களைப் பகுப்பாய்வு செய்து செயற்கை நுண்ணறிவு, நமக்குச் சுருக்கி அளிக்கும் விவரங்கள், மனித மூளையின் நினைவாற்றல் அமைப்பையே மாற்றியமைக்கும் திறன் கொண்டவை என்று புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

மனித குலத்திற்கு சவால்

இது தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த விஷயம் மட்டும் கிடையாது. நமது சிந்தனைத் திறன், சுயமாக யோசிக்கும் ஆற்றலுக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

தகவல்களை சுருக்கித் தரும் தொழில்நுட்பம்

வேகமான உலகியல் சூழலில், நீண்ட கட்டுரைகள், ஆய்வறிக்கைகளை படிக்க மனிதர்களுக்கு நேரம் என்பதே கிடைப்பது கிடையாது.

இதன் காரணமாக, சாட்ஜிபிடி (ChatGPT), கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற AI கருவிகளிடம், ‘இதைச் சுருக்கமாகச் சொல்’ என்று கேட்கிறோம். அவையும் நொடிப் பொழுதில் தகவல்களைச் சுருக்கித் தருகின்றன.

நுண்ணறிவு கருவிகள் செய்யும் தவறுகள்

செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் தகவல்களைச் சுருக்கித் தரும்போது இரண்டு முக்கியத் தவறுகளை செய்வதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டுரையின் மிக முக்கியமான விவரங்களை ஏஐ கருவிகள் விட்டுவிடுகின்றன. இதுபற்றி ஆய்வு செய்யப்பட்டதில், சுமார் 51.6% முக்கியமான தகவல்களை ஏஐ கருவிகள் சுருக்கத்தில் சேர்ப்பதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இல்லாத ஒரு விஷயத்தை இருந்தது போலவோ அல்லது தவறான முறையிலோ சித்தரித்துச் சுருக்கமாக வழங்குகின்றன. மனிதர்களாகிய நாமும் தொழில்நுட்பத்தின் மீதுள்ள நம்பிக்கையால், ஏஐ வழங்கியது உண்மை என நம்பி பயன்படுத்துகிறோம் அல்லது வாசிக்கிறோம்.

மனித நினைவாற்றலை சிதைக்கும் ஏஐ

மனித நினைவாற்றலைச் சிதைக்கும் ஏஐ மனித மூளை மிகவும் சுவாரசியமானது. அதேசமயம் எளிதில் ஏமாறக்கூடிய தன்மையும் கொண்டது.

உண்மையும் திரிக்கப்படும் அபாயம்

ஒரு நிகழ்வை நாம் நேரடியாகவே பார்த்திருந்தாலும், அதை ஏஐ சுருக்கி அளித்த தவறான தகவல்களைப் படிக்கும்போது நமது மூளை குழப்பமடைகிறது. இதனால், மனிதர்கள் நேரடியாகப் பார்த்த, அறிந்த உண்மையான விஷயங்களைக் கூட, ஏஐ அளித்த தகவல்களைப் படித்த பின் மறந்துவிடும் சூழல் ஏற்படுகிறது.

ஆய்வும் முடிவுகளும்

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 331 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இதனை உறுதிசெய்கின்றன.

ஆய்வில் பங்கேற்றவர்களிடம் கார் விபத்து தொடர்பான அனிமேஷன் காணொளி காண்பிக்கப்பட்டது.

24 முதல் 48 மணிநேரத்திற்குப் பிறகு, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்தக் காணொளி தொடர்பான சுருக்கக் குறிப்பு அவர்களிடம் காண்பிக்கப்பட்டது.

சிலருக்கு துல்லியமான சுருக்கமும், சிலருக்குத் தவறான விவரங்கள் அடங்கிய சுருக்கமும் வழங்கப்பட்டன.

துல்லியமான சுருக்கத்தைப் படித்தவர்களில் 83.6% பேர் உண்மையான நிகழ்வைச் சரியாக ஞாபகப்படுத்தி தெரிவித்தார்கள்.

தவறான விவரங்கள் கொண்ட ஏஐ சுருக்கத்தைப் படித்தவர்களில் 44.8% பேர் மட்டுமே உண்மையைச் சரியாக நினைவில் வைத்திருந்தனர்.

ஏஐயை நம்பும் மனித அறிவு

ஆகவே, ஏஐ தவறு செய்யும் என்று நமது அறிவுக்குத் தெரிந்திருந்தாலும், நமது ஆழ்மனது (Unconscious Mind) ஏஐ அளித்த தகவலையே உண்மையான நினைவாகப் பதிவு செய்துகொள்கிறது. தொழில்நுட்பத்தின் மீதான நமது அபார நம்பிக்கையும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

ஆய்வாளர்களின் எச்சரிக்கை

“ஏஐ தொழில்நுட்பத்தின் தவறுகளை மனிதர்கள் தலையிட்டுச் சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு பதிலாக ஏஐ செய்யும் தவறுகளால் மனித நினைவாற்றலே சிதைக்கப்படலாம் என்பது நிரூபணமாகி இருக்கிறது.

எனவே, காவல்துறை, மருத்துவத்துறை, செய்தித்துறை, அரசியல்ல ஏஐ கொடுக்கும் தகவல்கள் பெரிய ஆபத்துகளுக்கு வழி வகுக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நமக்கு உதவவே ஏஐ தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் நமக்கு உதவ வந்த உதவியாளர்கள் மட்டுமே. அவை நமது மூளைக்கு மாற்றாக முடியாது. வேகத்தை விடத் துல்லியமே முக்கியம்.

எனவே, முக்கியமான முடிவுகள் எடுக்கும்போதும், ஆழமான விஷயங்களைக் கற்கும்போதும் ஏஐ அளித்த சுருக்கங்களை மட்டும் நம்பியிருக்காமல், நாமே நேரடியாகப் படிப்பதே பாதுகாப்பானது.

ஏஐ நம் நேரத்தைச் சேமிப்பதில் தவறில்லை. ஆனால் நம்முடைய நினைவாற்றலை தீர்மானிக்க கூடிய இடத்தில் அமரக் கூடாது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in