

Beaver Supermoon India November 24 2026 NASA Timing
நாளை இரவு 8:23 மணிக்கு உச்சக்கட்ட பிரகாசத்தில் முழு நிலவு
இரவு வானை ரசிப்பவர்களுக்கு நாளை (நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை) ஒரு மறக்க முடியாத வானியல் நிகழ்வு காத்திருக்கிறது. வழக்கமான பௌர்ணமி நிலவை விட மிகப்பெரியதாகவும், அதிக ஒளியுடனும் காட்சியளிக்கும் 'பீவர் சூப்பர்மூன்' (Beaver Supermoon) நாளை இந்திய வானில் தோன்றவுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் கணிப்புப்படி, இந்திய நேரப்படி நாளை இரவு 8:23 மணிக்கு இந்த முழு நிலவு தனது உச்சநிலையை அடையும்.
ஏன் இதற்கு 'பீவர் மூன்' என்று பெயர் வந்தது?
நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வரும் நிலவு, தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் (Perigee) வரும் நாளில் முழு நிலவாகத் தோன்றும்போது அது 'சூப்பர்மூன்' என்று அழைக்கப்படுகிறது.
குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக நீர்நாய்கள் (Beavers) தங்களது இருப்பிடங்களைத் தயார்படுத்த மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் நவம்பர் மாதத்தில் இந்தப் பௌர்ணமி வருவதால், பாரம்பரியமாக இதற்கு 'பீவர் மூன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நாளை தோன்றும் நிலவின் சிறப்பம்சங்கள்
பூமிக்கு மிக அருகில் வருவதால், நடப்பு ஆண்டில் தோன்றிய மிகச்சிறிய முழு நிலவோடு ஒப்பிடும்போது நாளை தோன்றும் நிலவு சுமார் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசத்துடனும் ஜொலிக்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது.
வெறும் கண்ணால் காணலாம்
நாளை மாலை சூரியன் மறையும் வேளையில் கிழக்கு அடி வானத்தில் நிலவு தென்படும்போது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். மேகமூட்டம் இல்லாத திறந்தவெளியில் இருந்து எந்தவொரு சிறப்புக் கருவிகளும் இன்றி வெறும் கண்ணாலேயே இதனைத் தெளிவாகக் காண முடியும்.
புகைப்படம் எடுக்க டிப்ஸ்
இந்த அபூர்வ நிலவைத் துல்லியமாகப் புகைப்படம் எடுக்க விரும்புவோர் கேமராவிற்கு ட்ரைபாட் (Tripod) மற்றும் குறைந்த வெளிச்ச அமைப்பைப் (Lower Exposure) பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.
அடுத்து வரவிருக்கும் சூப்பர் மூன்களின் பட்டியல்
2026-ஆம் ஆண்டின் இறுதியில் வரிசையாகத் தோன்றவுள்ள மூன்று சூப்பர்மூன்களில் நாளை தோன்றும் பீவர் சூப்பர்மூனே முதலாவதாகும். இதனைத் தொடர்ந்து வரவுள்ள நிகழ்வுகளின் பட்டியல் இதோ உங்களுக்காக....
கோல்ட் மூன் (Cold Moon)
வரும் 2026 டிசம்பர் 23 அல்லது 24-ஆம் தேதிகளில் தோன்றும் 'கோல்ட் மூன்', இந்த ஆண்டிலேயே பூமிக்கு மிக அருகில் வரும் மிகப்பெரிய மற்றும் அதிகப் பிரகாசம் கொண்ட சூப்பர்மூனாக அமையும்.
ஓநாய் மூன் (Wolf Moon)
புதிய ஆண்டில் 2027 ஜனவரி 22-ஆம் தேதி 'ஓநாய் மூன்' வானில் தோன்றவுள்ளது.
ஸ்னோ மூன் (Snow Moon)
சில வானியல் அளவீடுகளின்படி, 2027 பிப்ரவரி 20-ஆம் தேதி தோன்றும் 'ஸ்னோ மூன்' நிலவும் சூப்பர்மூன் வரம்பிற்குள் வருவதால், இது தொடர்ச்சியான நான்கு சூப்பர்மூன்களின் வரிசையாகவும் பார்க்கப்படுகிறது.
======================