

KitKat Introduces "Have a Break" Smartphone 'Signal Jammer' Cover: A New Way to Take a Peaceful Break!
kitkat -இன் "Have a Break"
"Have a Break" என்ற தனது புகழ்பெற்ற வாசகத்தின் மூலம் உலகெங்கும் உள்ள மக்களைக் கவர்ந்த கிட்காட் (KitKat) நிறுவனம், தற்போது அந்த வாசகத்திற்குத் தொழில்நுட்ப ரீதியாக உயிர் கொடுத்துள்ளது.
மொபைல் சிக்னலை தடுக்கும் புதியவகை சாக்லெட் கவர்
மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை ஸ்மார்ட்போன்களில் வீணாக்காமல், உண்மையான 'இடைவேளை' எடுக்க உதவும் வகையில் மொபைல் சிக்னல்களைத் தடுக்கும் புதிய வகை சாக்லேட் கவரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் உலகிலிருந்து ஒரு தற்காலிக விடுதலை
இன்றைய காலத்தில் மக்கள் சாப்பிடும் போது கூட மொபைல் நோட்டிபிகேஷன்கள் மற்றும் சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளனர்.
'Break Mode' புதிய திட்டம்
இதைத் தவிர்க்க, கிட்காட் பனாமா மற்றும் ஓகில்வி கொலம்பியா (Ogilvy Colombia) நிறுவனம் இணைந்து 'Break Mode' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள விசேஷ சாக்லேட் உறை அதாவது சாக்லெட் கவர் , உங்கள் போனை ஒரு தற்காலிகமான 'சிக்னல் இல்லாத பகுதிக்குள்' கொண்டு செல்லும்.
ஃபாரடே கூண்டு (Faraday Cage) தொழில்நுட்பம்
இந்த உறை சாதாரணமாகத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் ஃபாரடே கூண்டு என்ற அறிவியல் தொழில்நுட்பம் உள்ளது.
கட்டமைப்பு
இந்த உறை தாமிரம், பாலியஸ்டர் மற்றும் பாலிப்ரோப்பிலீன் ஆகிய அடுக்குகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
செயல்படும் விதம் எப்படி தெரியுமா?
போனை இந்த உறைக்குள் வைத்து மூடும்போது, அதன் உலோக அடுக்குகள் ஒரு கவசம் போலச் செயல்படும்.
வெளிப்புறத்திலிருந்து வரும் செல்லுலார் சிக்னல்கள், வைஃபை மற்றும் ரேடியோ அலைகள் அந்த உலோகப் பரப்பிலேயே சிதறடிக்கப்படும்.
இதன் விளைவு என்ன?
இதன் காரணமாக உறைக்குள் இருக்கும் மொபைல் போனுக்கு எந்தவொரு அழைப்போ, குறுஞ்செய்தியோ அல்லது இணையத் தொடர்போ கிடைக்காது.
சுற்றுச்சூழல் மற்றும் ஆயுட்காலம்
இந்தத் தொழில்நுட்பம் நீண்ட காலம் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் கவரல்ல இது. சுமார் ஒரு வருடம் வரை இதன் சிக்னல் தடுக்கும் திறன் குறையாமல் இருக்கும்.
மேலும், ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த உறையை எளிதாக மறுசுழற்சி செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிபுணர்கள் கூறுவது என்ன?
இது குறித்து நெஸ்லே சந்தைப்படுத்தல் இயக்குனர் கிம் வைகல் கூறுகையில், "உங்கள் டிஜிட்டல் உலகம் அமைதியாகி, நீங்கள் உண்மையான தருணங்களை அனுபவிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
போனை உள்ளே வைத்தவுடன் உங்கள் தனிப்பட்ட நேரம் தொடங்குகிறது," எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தத் தயாரிப்பு ஒரு விளம்பரப் பிரச்சாரமாகத் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் உலகளாவிய வணிக ரீதியான விற்பனைக்கு வருவது குறித்து நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இன்றைய தலைமுறைக்கு கிடைத்த வரப்பிரசாதம்
அதிகப்படியான மொபைல் பயன்பாட்டால் அவதிப்படும் இன்றைய தலைமுறைக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றும் கூறப்படுகிறது.
=====