

சைவ, வைணவ ஒற்றுமை
Margazhi Month 2025 Thiruppavai Song Lyrics in Tamil : சைவ, வைணவ ஒற்றுமையை பலப்படுத்தும் மாதமாக கருதப்படுவது மார்கழி. மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து சிவ பெருமானையும், பெருமாளையும் வழிபட்டால் திருமண வரம் கைகூடும். வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, நீராடி, ஆண்டாளின் திருப்பாவையையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையையும் பாடி வழிபட்டால் தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும். மார்கழி மாதத்தின் 3 மற்றும் 4வது நாட்களில் பாட வேண்டிய திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களை பார்க்கலாம்...
திருப்பாவை பாடல் 03 :
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்.
திருவெம்பாவை பாடல் 03 :
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.
திருப்பாவை 4வது பாடல் :
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
திருவெம்பாவை 4வது பாடல் :
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
===================