

சபரிமலை - அலைமோதும் கூட்டம்
Sabarimala Ayyappa Swamy Prasadam By India Post At Home Delivery : சபரிமலையில் மண்டல பூஜைக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில, நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஸ்பாட் முன்பதிவு டோக்கன்களை கூட்டத்திற்கு ஏற்றவாறு குறைத்தும், அதிகரித்தும் வருகிறது.
ஐயப்பன் கோவில் பிரசாதம்
பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுவது போலவே, ஐயப்பன் கோவிலில் அரவணைப் பாயாசம் மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஐயப்பன் பிரசாதத்தை வாங்க சபரிமலைக்குத் தான் செல்ல வேண்டும்.
தபால் மூலம் ஐயப்பன் பிரசாதம்
ஆனால் இப்போது இந்த நிலை மாற்றப்பட்டு இருக்கிறது. அதாவது இருக்கும் இடத்திலிருந்தே தபால் அலுவலகங்கள் மூலம் ஆர்டர் செய்தால், உங்கள் வீட்டிற்கே சபரிமலையில் இருந்து அரவணை பிரசாதம் வந்து சேரும். இதற்காக தபால் துறையுடன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஒன்றிணைந்து செயல்படுகிறது.
பிரசாதம் வாங்க முன்பதிவு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தே அரவணை பிரசாதத்தை வாங்குவதற்கு சபரிமலையில் உள்ள தபால் துறை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சபரிமலை ஐயப்பன் பிரசாதத்தை வாங்க முன்பதிவு செய்யலாம்.
தபால் துறையின் அரிய சேவை
இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் சபரிமலை பிரசாதத்தை கொண்டு சேர்ப்பதே இலக்காக கொண்டுள்ளது தபால்துறை. இதற்காக வீட்டிற்கே பிரசாதத்தை டெலிவரி செய்யும் திட்டத்தில் தபால் துறை இறங்கியுள்ளது. இந்தப் பிரசாதத்தில் நெய், அரவணை, மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அரச்சனைப் பிரசாதம் ஆகியவை அடங்கும்.
ரூ.520 கட்டணம்
ஒரு டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டை வாங்க ரூ.520-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதே போல் 4 டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டிற்கு ரூ.960 மற்றும் 10 டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டிற்கு ரூ.1,760-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஐயப்ப பக்தர்களுக்கு வாய்ப்பு
தபால் நிலையங்களில் பிரசாதம் வேண்டி பணம் செலுத்தினால், அடுத்த சில தினங்களில் சபரிமலை ஐயப்பன் பிரசாதம் உங்கள் வீடு தேடி கொண்டு வந்து சேர்க்கப்படும். சபரிமலைக்கு செல்ல முடியாதவர்கள், ஐயப்பன் பிரசாத்தை வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள், இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தபால்துறை தெரிவித்துள்ளது.
=====================