

திருவண்ணாமலை விழாக்கோலம்
Tiruvannamalai Karthigai Deepam 2025 Dates in Tamil : திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவை ஒட்டி அண்ணாமலையார் கோயில் வண்ண விளக்குகள், மலர் அலங்காரங்களால் பூலோக கயிலாயம் போல காட்சியளிக்கிறது.
குவியும் பக்தர்கள்
மகா தீபத் திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரத் தொடங்கி விட்டனர். முக்கிய நிகழ்வான மகாதீப பெருவிழா நாளை (3ம் தேதி) நடைபெற உள்ளது.
4,500 கிலோ நெய் கொள்முதல்
நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்றுவதற்காக, 4,500 கிலோ நெய் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மலை உச்சியில் தீபக் கொப்பரை
மகாதீபம் ஏற்றுவதற்கான ஐந்தரை அடி உயரம் கொண்ட செப்பினால் உருவான மகா தீப கொப்பரை வண்ணம் தீட்டப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் உருவத்துடன், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மலை உச்சிற்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்றுவதற்காக 1,500 மீட்டர் துணி திரி, உபயதாரர்கள் மூலம் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை, திருப்பணியாளர்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சென்றார்கள்.
பக்தர்கள் மலையேறத் தடை
மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தீபத்திருவிழாவின் போது, மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவை தரிசிக்க இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு ரயில்கள், பேருந்துகள்
அதையொட்டி, வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
================