

மாம்பழ விளைச்சல்
மாம்பழ விளைச்சலுக்கு பெயர் போனது இந்தியா. இதேபோன்று பல்வேறு நாடுகளில் சுவைமிக்க மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அதிலும் ஜப்பானில் விளையும் மியாசாகி மாம்பழங்கள் உலகப் புகழ் பெற்றவை.
மியாசாகி மாம்பழங்கள்
கியூஷு மாகாணம் மியாசாகி நகரைத் தாயகமாகக் கொண்ட இந்த மாம்பழங்கள், உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழ வகையாகக் கருதப்படுகின்றன.
விலை ரூ.3.5 லட்சம் வரை
சர்வதேசச் சந்தையில் இதன் விலை ஒரு கிலோ ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3.5 வரை லட்சம் வரை விற்பனையாகிறது. இந்த வகை மாம்பழங்கள் பழுக்கும் போது, வழக்கமான மாம்பழங்களைப் போல மஞ்சள் நிறமாக மாறாமல், அடர் ஊதா அல்லது ரூபி-சிவப்பு நிறத்தைப் பெறுகின்றன.
சூரியனின் முட்டை
ஜப்பான் மக்கள் இதனை ‘சூரியனின் முட்டை' (Egg of the Sun) என்று பாசத்தோடு அழைக்கிறார்கள். இந்த மாம்பழங்களின் விலை அதிகம் என்பதால் சாதாரண தோப்புகளில், திறந்த வெளிகளில் விளைவிக்கப்படுவது கிடையாது.
பசுமை குடில்கள் வளர்ப்பு
வெப்பநிலை மற்றும் சூரிய ஒளி கட்டுப்படுத்தப்பட்ட நவீன கண்ணாடி பசுமைக் குடில்களில் மட்டுமே வளர்க்கப்படுகின்றன.
ஜப்பானிய வேளாண் அமைப்புகளின் கடுமையான தரக்கட்டுப்பாட்டின்படி, ஒவ்வொரு பழமும் குறைந்தபட்சம் 350 கிராம் எடையும், 15 சதவீதத்துக்கும் அதிகமான சர்க்கரை அளவும் கொண்டிருந்தால் மட்டுமே ‘மியாசாகி' என்ற பெயரில் சந்தைப்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.
ராமருக்கு மியாசாகி மாம்பழ படையல்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மியாசாகி மாம்பழம் முதன்முறையாக படைக்கப்பட்டுள்ளது. துளசி இலையுடன் இந்த வகை மியாசாகிபழம் படைக்கப்பட்டது. ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1 லட்சமாகும்.
அயோத்தி தோட்டத்தில் விளைவிப்பு
அயோத்தியிலுள்ள தனது தோட்டத்தில் ஓம்பிரகாஷ் சிங் மியாசாகி மாம்பழங்களை விளைவித்து இருந்தார்
இதுகுறித்து ஓம்பிரகாஷ் சிங் கூறும்போது, “இந்த மாம்பழங்கள் மிகவும் விலை உயர்ந்தவையாகும். மற்ற மாம்பழங்களின் சுவையைக் காட்டிலும் இது கூடுதல் சுவை மிக்கது. அதிக நார்ச்சத்தும், வைட்டமின் சத்துகளும் கொண்டது.
12 மியாசாகி மாம்பழங்கள் விளைந்தன
அயோத்தியில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு இந்த வகை மியாசாகி பழங்கள் சிறப்பாக விளைகின்றன. இந்த ஆண்டு 150 கிராம் எடை முதல் 300 கிராம் எடை வரையிலான 12 மியாசாகி மாம்பழங்கள் மரத்தில் விளைந்தன. முதல் மாம்பழத்தை அயோத்தி ராமருக்கு படைத்தேன்’’ என்றார்.
மாம்பழ கனிகளின் அரசன் என்று அழைக்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் சூரியனின் நிறத்தை ஒத்து இருக்கின்றன.
இவை ராமருக்கு படைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக கோவில் நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களும் பாலராமருக்கு மியாசாகி மாம்பழங்கள் படைக்கப்பட்டு இருப்பதை, வியந்து பார்த்து சென்றனர்.
============