

அன்னாபிஷேகம்
Gangaikonda Cholapuram Temple Annabhishekam 2025 : அன்னாபிஷேகம் செய்வது சிவாலய விழாக்களில் ஒன்று. சோற்றை வடித்து ஆறவைத்து அதனை தெய்வத் திருமேனியில் சாற்றி, அதன் மீது அதிரசம், வடை போன்றவற்றைக் கொண்டு அலங்கரித்து, வழிபடுவதே அன்னாபிஷேகம். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும்போது பால், தயிர், தேன், கரும்புச்சாறு போன்ற பொருட்களின் வரிசையில், அன்னத்தையும் அபிஷேகம் செய்வர்.
ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஸ்படிக லிங்க மூர்த்திக்கு தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி வரும்அஸ்வினி திருநாளன்று அன்னாபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம். அன்றைய தினம் சிவலிங்க மூர்த்திக்கு பால், தயிர், போன்றவற்றில் அபிஷேகம் செய்து நன்கு ஒற்றாடை சாற்றி அதன்பின் அன்னத்தை முழுவதும் மூடும்படி அபிஷேகம் செய்து, அதன் மீது அதிரசம், அப்பம், முறுக்கு, வடை, தேன்குழல் போன்றவற்றால் அலங்கரிப்பர்.
பெரும் படையலுடன் அன்னாபிஷேகம்
எதிரே அடுக்கு இலைகள் இட்டு, அதில் வாழைக்காய் கறி, வெண்டைக்காய் கறி போன்ற கறி வகைகள், சுண்டல், புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் போன்ற அன்னங்கள், பாயசங்கள் போன்றவற்றை அலங்காரமாக வைத்து தீபாராதனைகளை காட்டி வழிபடுவர்.
பக்தர்கள் சிறப்பு வழிபாடு
அன்னக் குவியலில் அமர்ந்திருக்கும் பெருமானை பக்தர்கள் கண்ணாரக் கண்டு வழிபட்ட பிறகு, திரையிட்டு அலங்காரங்களைக் களைவர். பெருமானின் உச்சியில் வைக்கப்படும் சோற்றுத் திரளையும் படைக்கப்பட்ட பட்சணங்கள், கறிகள் ஆகியவற்றில் சிறுபகுதி அகன்ற தட்டில் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தக் குளத்தில் கரைக்கப்படும்.
பக்தர்களுக்கு அபிஷேக அன்னம்
பின்னர், பெருமான் மீது அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை எடுத்து குழம்பு, தயிர் போன்றவற்றுடன் கலந்து அன்பர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படும். எம்பெருமான், உயிர்களுக்கு வாழ்வின் ஆதாரமாக இருக்கும் உணவாகவும், நீராகவும் இருப்பதை இது குறிக்கிறது.
உணவுப் பஞ்சமே வராது
அன்னாபிஷேக விழாவைக் காண்பதும், அதில் அளிக்கப்படும் நிவேதனங்களை உண்பதும் பெரும்புண்ணியமாக கருதப்படுகிறது. அன்னாபிஷேகப் படையல் உணவை உண்பவர்களுக்கு, வாழ்வில் உணவுத் தட்டுப்பாடு வராது என்று நம்புகின்றனர்.
முருகன் கோவில்களிலும் அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம் என்பது, சிவபெருமானுக்கு மட்டுமே உரியதாகச் சொல்லப்பட்டுள்ள விழா என்றாலும், முருகன் கோவில்களிலும் இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில், ஷண்முகருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னத்துடன், வெண்ணெயைக் கலந்து ஷண்முகர் மீது சாற்றி, பட்சணங்களால் அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர். இது இந்த தலத்திற்கே உரிய சிறப்பான வழிபாடு.
1,000 கிலோ அன்னத்தில் அபிஷேகம்
மாமன்னன் இராஜேந்திர சோழன், கங்கை வரை தனது படையெடுத்து வென்று வந்ததை நினைவூட்டும் வகையில் கட்டியதே கங்கை கொண்ட சோழபுரம் கோயிலாகும். இதன் லிங்கம் பெரியதாகும். ஐப்பசி பௌர்ணமியன்று, 1000 கிலோ அன்னத்தை பெருமானுக்கு அபிஷேகித்து, நிவேதனமாக அளிக்கின்றனர். இத்தகைய பெரிய அன்னதானத்தை வேறெங்கும் பார்க்கவே முடியாது.
கோவில்களில் மடைப்பள்ளிகள்
தெய்வங்களுக்குச் செய்யப்படும் நிவேதனங்களுக்குரிய பெயர்களில், மடைப்பள்ளியும் ஒன்றாகும். பழைய காலத்தில், தெய்வங்களுக்கு இடப்படும் உயர்ந்த உணவு `மடை’ என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. தெய்வங்களுக்குரிய மடையைச் செய்வதற்கான இடம் மடைபள்ளி எனப்பட்டது. ஆலயங்களில், பெருமளவு உணவு நிவேதனமாகத் தயாரிக்கப்பட்டதால், மடைப் பள்ளியினை பெரியதாக அமைத்தனர்.
சமைக்கவும், பாத்திரங்களைக் கழுவித் தூய்மை செய்யவும், தேவையான நீரைப் பெற மடைப்பள்ளிக்குள்ளேயே கிணறு அமைக்கப்பட்டது. பெரிய பாத்திரங்களை வைத்து சமைக்கும் வகையில், கோட்டை அடுப்புக்கள் கட்டப்பட்டன. சமைத்த அன்னத்தை, ஆறவைக்கவும், அதனுடன் குழம்பு முதலியவற்றைச் சேர்த்துக் கிளறுவதற்காகவும் பெரிய பலகை கற்களால் அமைக்கப்பட்டது. இங்கு சமைக்கப்படும் அன்னமே, பெருமான் அபிஷகத்திற்கு பயன்படுத்தப்படும்.
======================