

சோலைமலை முருகன்
murugan temple kumbabishegam : அழகர்மலை உச்சியில் அமைந்துள்ள முருகப் பெருமானின் 6வது படை வீடுதான் சோலைமலை முருகன் கோவில்.
பழமுதிர்சோலை
மதுரையில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அடர்ந்த சோலைகளுக்கு நடுவே இந்த கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பழமுதிர்சோலை முருகன் கோவில் என்ற பெயரும் உண்டு.
பசுமை போர்த்திய மலை
மலைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று.
பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெயருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம்
வெற்றிவேல் முருகன்
இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். மேலும் முருகன், வள்ளி மற்றும் தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
அருட்கடலாகிய முருகப்பெருமானது ஏனைய படை வீடுகளுக்கு இல்லாது இப்படை வீட்டுக்கு மட்டுமே உரிய தனிப்பெருஞ்சிறப்பொன்றுண்டு.
முருகப்பெருமானின் இத்தலமானது சைவ பெருமைகளையும் மற்றும் திருமாலின் வைணவப் பெருமைகளையும் ஒருசேர கொண்டு விளங்குகிறது.
மூலவர் முருகப்பெருமானின் அருகில் பெருமாள் (அழகர்) சந்நிதியும் அமைந்துள்ளது.
திருமாலோடு முருகன்
மற்ற படைவீடுகளைப் போலன்றி, அழகே வடிவான அபிஷேக பிரியரான முருகப்பெருமானும் அலங்கார பிரியரான திருமாலும் இணைந்து அருள்பாலிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
தேன், தினைமாவு நைவேத்தியம்
பழமுதிர்சோலை முருகனுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகனுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
ஔவையாரை சோதித்த முருகன்
அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் "சுட்ட பழம் வேண்டுமா?, சுடாத பழம் வேண்டுமா?" என்று கேட்டு, மெய்யறிவு புகட்டியருளிய திருத்தலம் இது.
பழமுதிர்சோலை குடமுழுக்கு
பழமுதிர்சோலையில் 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்த கோவிலுக்கு அறநிலையத்துறை குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்தது.
இதையொட்டி கடந்த ஆண்டு பாலாலயம் நடந்தது. அதன் பிறகு திருப்பணிகள் தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டது.
யாகசாலை பூஜைகள்
திருப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜூலை 5ம் தேதி (நாளை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை விநாயகர் பூஜையுடன் நடைபெறும். பின்னர் காலை 5.15 மணிக்கு மஹா பூர்ணாகுதி நிறைவு பெற்றதும் புனித தீர்த்தக்குடங்கள் கொண்டு செல்லப்படும்.
5.45 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சோலைமலை முருகன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
அதிசயம் நிறைந்த நாவல் மரம்
இந்த கோவிலின் மிகப்பெரிய அதிசயம் இந்த நாவல் மரமாகும். வழக்கமாக நாவல் பழங்கள் கோடை காலத்தில் கிடைக்கும்; நாவல் மரங்கள் கோடைகாலத்தில் தான் காய் காய்த்து அதற்குப் பிறகு ஆவணி மாதத்தில் துவக்கம் வரை கிடைக்கும்.
ஆனால் பழமுதிர்சோலையில் இந்த ஆலயத்தில் இருக்கும் நாவல் மரம் ஒவ்வொரு ஆண்டுமே ஒரு மிகப்பெரிய அதிசயமாக கந்தசஷ்டி திருவிழா நடக்கும் பொழுது அதாவது ஐப்பசி மாதத்தில் தான் காய்க்கத் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
==============