

மார்கழி மாதம்
Margali Masam 2025 Special in Tamil : மார்கழி மாதம், தேவர்களுக்கு அதிகாலை நேரம் (பிரம்ம முகூர்த்தம்), சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்கும் காலம் இது. ஆன்மிக முன்னேற்றத்திற்கு, வழிபாட்டிற்கு உகந்த மாதம் மார்கழி தான்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்
இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலம் போட்டு, திருப்பாவை/திருவெம்பாவை பாடி, விஷ்ணு மற்றும் சிவனை வழிபடுவது சிறப்பு. இது குளிர் காலம், கர்நாடக இசை விழாக்கள் நடக்கும் மாதம், ஆன்மிகத்தில் ஆழ்ந்து மனதை ஒருநிலைப்படுத்த ஏற்ற காலம்.
அதிகாலை வழிபாடு - கூடுதல் பலன்
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதன்படி, மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலைப் பொழுதாகும். எனவே, இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு சிறப்பு பலன்களைத் தரும்.
விஷ்ணு வழிபாட்டிற்கான மாதம்
பகவான் மகாவிஷ்ணு, "மாதங்களில் நான் மார்கழி" என்று கூறியுள்ளதால், இது விஷ்ணு வழிபாட்டிற்கு மிக முக்கியமான மாதம். மார்கழி மாதத்தில் சூரிய பகவான், குரு பகவானின் வீட்டில் சஞ்சரிக்கும் காலம்
ஆண்கள், பெண்களின் பணி
மார்கழிதான் மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு சிறப்பான காலமாகும். இம்மாதத்தில் ஆண்கள் அதிகாலையில் பஜனை மேற்கொண்டு வீதிவலம் வருகிறார்கள்.பெண்கள் வீட்டு வாசலில் தரைமீது வண்ண வண்ணக் கோலமிடுகிறார்கள்.
மங்கல காரியங்களை தவிர்க்க வேண்டும்
ஏனைய காலங்களில் மூலாதாரத்தை நோக்கி இருக்கும் ஈர்ப்பு சக்தி (புவி ஈர்ப்பு விசை காரணமாக) மார்கழியில், பூமியில் வடபாதியில் இருக்கும் மக்களான நமக்கு குறைவாகவே இருக்கும். இப்போது விதை விதைத்தால் அது சரியாக முளைக்காது. உயிர்சக்தி மந்தமாயிருக்கும். இக்கால கட்டத்தில் நம் உடம்பின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும், ஸ்திரமாக்கி சேமித்துக் கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவேதான் இச்சமயம் திருமணங்கள் நடைபெறுவதில்லை.
இல்லறத்தில் இருப்போரும் வழிபாட்டில் கவனம் செலுத்துவதை மரபாகக் கொண்டுள்ளனர். சூரியசக்தி கீழ்நோக்கி செயல்படுவதால் மனநோயாளிகள் தங்கள் மனநிலையில் மாற்றம் கொண்டு வர இது உகந்த காலம்.
திருப்பாவை முதல் பாடல் :
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
திருவெம்பாவை முதல் பாடல் :
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
===============