

மகா கந்த சஷ்டி திருவிழா
Tiruchendur Soorasamharam 2025 : தமிழகம் எங்கும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நடைபெற்றாலும், திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி, வளர்பிறை சஷ்டி நாள் வரை இந்த விழாவானது நீடிக்கும்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடந்ததால், அங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், காலை மற்றும் மாலை யாகம் நடத்தி, உற்சவர்களை தங்க பல்லக்கில் வைத்து வீதி உலா கொண்டு வருவார்கள், பின்னர் மகா தீபாராதனை நடக்கும். சூரசம்ஹாரம் மகா சஷ்டி அன்று திருச்செந்தூர் கடற்கரையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு நடைபெறும்.
சூரசம்ஹாரத்தின் அற்புதம்
திருச்செந்தூரில் லட்சக் கணக்கான பக்தர்கள் சூழ்ந்து இருக்க, சூரசம்ஹாரம் நடைபெறும் போது மட்டும் கடல் அலைகள் உள்வாங்கி, கடற்கரை பெரிய அதிசயமாக காணப்படும். இது அரிய காட்சியாகும். அப்போது பக்தர்கள் அரோகரா என்ற முழக்கம் எழுப்பி முருகனை வழிபடுவர். இந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி திங்கட்கிழமை மாலை நான்கரை மணி அளவில் சூரசம்ஹாரம் நடைபெற இருக்கிறது.
போர் கோலத்தில் ஜெயந்திநாதர் (முருகன்)
தாய் பார்வதியிடம் வேல் வாங்கி, போருக்கு தயாராகும் முருகப் பெருமான், அன்றைய தினம் மாலை 4 மணி அளவில், தளபதி வீரபாகு மற்றும் படையோடு சூரபத்மனை எதிர்கொள்ள தயாராவார். பலவகை தந்திரங்கள், மாயங்கள் புரிவதில் வல்லவனான சூரபத்மன் முருகனோடு மாயங்கள் செய்தவாறு போர் புரிவான். யானை முகம், சிங்கமுகம் என மாறி மாறி வந்து சூரபத்மன் போரை நிகழ்த்துவான். ஆனால், அவனை வதம் செய்யவே பிறப்பெடுத்த வந்த முருகப் பெருமான் முன்பு அனைத்து மாயைகளும் தவிடுபொடியாகி விடும்.
ஒளிந்து கொள்ளும் சூரபத்மன்
முருகனின் பேராற்றலை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறும் சூரபத்மன், ஒரு மாமரத்தில் ஒளிந்து கொள்வான். முருகப் பெருமானால் தன்னை அழிக்க முடியாது என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, பார்வதி தேவி தனக்கு அளித்த சக்தி வேலை மரத்தின் மீது ஜெயந்திநாதர் எய்ய மரம் இரண்டாக பிளந்து ஒரு பகுதி சேவலாகவும் மற்றொரு பகுதி மயிலாகவும் மாறும்.
சூரபத்மனை ஆட்கொள்ளும் முருகப் பெருமான்
இதைத்தொடர்ந்து சூரசம்ஹாரம் முடிவுக்கு வர சேவல் கொடியாகவும், மயில் வாகனமுமாக முருகனின் வசமாகும். சூரபத்மனை அவ்வாறு அருள்பாலித்து ஆட்கொள்கிறார் முருகப் பெருமான்.
சேவலை வெற்றிச் சின்னமாக கொடியிலும் மயிலை தனது வாகனமாகவும் அவர் வைத்துக் கொள்கிறார். இந்த நிகழ்வின் போது திருச்செந்தூர் முழுவதுமே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை மட்டும் அளவுக்கு ஒலிக்கும். சூரசம்ஹாரத்தை சிவாச்சாரியார்கள் நடத்திக் காட்டும் விதம், பக்தர்கள் அனைவருமே முருகப் பெருமானுடன் சேர்ந்து, சூரபத்மனை வதம் செய்தது போன்று இருக்கும். சூரன் வதம் முடிந்ததும் பக்தர்கள் முகத்தில் தெரியும் பரவசம், முருகனின் மீது அவர்களுக்கு இருக்கும் பக்தியை வெளிப்படுத்தும்.
முருகனுக்கு சிறப்பு ஆராதனை
அசுரனை வென்ற முருகப் பெருமான் மக்கள் வெள்ளத்தில் நீந்தியப்படி மண்டபத்தை அடைவார். கந்தனுக்கு சர்வஅலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்படும். திருச்செந்தூரில் தங்கி ஆறு நாட்கள் விரதம் இருந்து சூரசம்ஹாரத்தை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் முருகனின் வீதி உலாவையும் தரிசித்த பிறகு, விரதத்தை முடிப்பார்கள்.
ஆறு முகங்கள், 12 கரங்கள்
திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வின் போது மட்டுமே முருகனுடைய ஆறுமுகங்களையும் 12 கரங்களையும் முழுமையாக தரிசிக்க முடியும். ஏனைய நாட்களில் ஒரு முகமும் இரண்டு கரங்களும் மட்டுமே தரிசிக்கும்படி அமைத்திருப்பார்கள். மகா சஷ்டிக்காக பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி அன்று மட்டும் விரதம் இருந்து முருகனின் அருளை பெறலாம்.
முருகனை நினைத்து சொல்ல வேண்டிய மந்திரம்
"சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே"
திருத்தணிகை முருகன்
திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பிறகும் முருகப் பெருமானின் கோபமும் ஆத்திரமும் அடங்கவில்லை. எனவே அமைதியை தேடி கோபத்தை குறித்துக் கொள்ள அவர் சென்று அமர்ந்த மலை தான் திருத்தணிகை. இங்கு வள்ளி - தேவசேனை சமேதராக முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். அதுமட்டுமின்றி திருத்தணிக்கு அருகே இருக்கும் வள்ளி மலையில் தான் வள்ளியை அவர் காதல் திருமணம் செய்தார்.
திருத்தணியில் சூரசம்ஹாரம் கிடையாது
சூரசம்ஹாரம் நடந்த பிறகு முருகப் பெருமானின் கோபம் தணிந்து சாந்தமடைந்த இடம் என்பதால் திருத்தணியில் கந்த சஷ்டி விழா கோலகாலமாக நடைபெற்றாலும் சூரசம்ஹாரம் நடக்காது. முருகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி சேவை என்று சொல்லப்படும் பூக்களால் அலங்காரமும் அபிஷேகம் செய்யப்படும்.
=====