

கார்த்திகை மாதம்
Sabarimala Ayyappan Viratham in Tamil : கார்த்திகை மாதம் பிறந்தால், எங்கு பார்த்தாலும். சரண கோஷம் தான் கேட்கும். சபரிமலைக்கு விரதம் இருக்க மாலை அணியும் பக்தர்கள், ஆன்மீக பயணத்திற்கான செயல்பாடுகளை தொடங்குவார்கள். சிவாலயங்கள் கார்த்திகை தீபத்திற்கான முன்னேற்பாடுகளை தொடங்கும்.
மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் முதல் நாளான (17.11.2025 - திங்கள் கிழமை) இன்று பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். அப்படி இல்லா விட்டால் வரும் சனிக்கிழமை அல்லது உத்தர நட்சத்திரம் வரும் நாளில் மாலை அணியலாம். குருநாதரின் கையால் ருத்ராட்ச மாலை அல்லது துளசி மணி மாலையை வாங்க வேண்டும். தீஷா வஸ்திரமும் வாங்க வேண்டும். இவைகளை அணிந்தபின் கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.
கன்னிசாமிகள் வழிபடும் முறை
சபரிமலைக்கு முதல் முறையாகச் செல்பவர்கள் பதினெட்டாம் படியில் ஏற வேண்டும் என்பதற்காக பம்பையில் நீராடி உடனே இருமுடி கட்டுகின்றனர். இது சரியான முறை அல்ல. 48 நாள் (ஒரு மண்டலம் என்பார்கள்) விரதம் இருக்க வேண்டும். ஒருகாலத்தில் 60 நாள் விரதம் இருந்தார்கள். கார்த்திகை, மார்கழி முடிந்து, தை மாதம் மகர ஜோதியை பார்த்து விட்டு விரதத்தை முடிப்பார்கள்.
தாயார் கையால் மாலை அணியலாம்
48 நாட்கள் விரதத்திற்கு முன்னதாக சபரிமலை செல்ல நேர்ந்தால், ஊர் திரும்பி மகர விளக்கு முடியும் வரை, விரதத்தைத் தொடர வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். வீட்டில் மாலை அணிவதாக இருந்தால் தாயார் கையால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். .
விரதமும் அருமையான அனுபவம்
கடுமையான விரதம் என்று அஞ்சுவார்கள். பழகிவிட்டால் அற்புத அனுபவமாக இருக்கும். மாலை போட்டவர்கள் கடுமையான பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் பச்சை தண்ணீரில்தான் குளிக்க வேண்டும் என்பது நியதி. உடல்நிலை சரியில்லை என்பவர்கள், தண்ணீரின் குளுமையை குறைத்து, சற்று வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம்.
மங்கலச் சின்னங்களை அணிய வேண்டும்
நெற்றியில் சந்தனம், விபூதி, குங்குமம் போன்ற மங்கலச் சின்னங்களை அணிந்து கொள்ள வேண்டும். ஐயப்பனின் திருவுருவப் படத்திற்கு புதிதாக மலர் அணிவித்து, தினமும் ஏதாவது நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். மிக எளிமையாக ஏதாவது ஒரு பழம் வைத்து வழிபடலாம். சரணம் சொல்லி வழிபட வேண்டும்.
சுத்த சைவம்
சுத்த சைவமாக இருந்து இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். சாந்தமாகப் பேச வேண்டும். பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின் ரூபமாகப் பார்க்க வேண்டும் பேசுவதற்கு முன்பும் சரி, பேசி முடித்த பிறகும் சரி ‘‘சுவாமி சரணம்’’ என சொல்ல வேண்டும்.
செய்யக் கூடாதவை
என்ன செய்வது என்பதைவிட, என்ன செய்யக் கூடாது என்பதில் கவனம் தேவை. சந்தேகம் இருந்தால் அனுபவமிக்க குருமார்களிடம் ஆலோசனை பெற வேண்டும் கோபம் கூடாது. தகாத வார்த்தைகள் கூடாது. சண்டை போடக் கூடாது. காலணி கண்டிப்பாக அணியக் கூடாது.
அலுவலக கட்டுப்பாடு காரணமாக வண்ண உடை அணிய முடியாமல், காலணி அணிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தாராளமாக அணிந்து கொள்ளலாம்.
மாலையும் நீராடி பூஜை செய்ய வேண்டும். இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக ஒரு பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கன்னி பூஜை
சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் புதிய சாமிகளை கன்னி சாமி என்பர். அவர்களுக்கு வழிகாட்டி நடத்திச் செல்லும் சாமிகளை குருசாமிகள் என்று சொல்லும் வழக்கம் உண்டு. முதல்முறையாக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கன்னி பூஜை என்னும் சடங்கு நடத்திச் செல்வார்கள்.
இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழி பூஜை என்று சொல்வார்கள். பொதுவாக கார்த்திகை மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து மார்கழி மாதம் 11ம் தேதிக்குள் இச்சடங்கு நல்ல நாள் பார்த்து நடத்த வேண்டும்.
வீட்டில்தான் இதனைச் செய்ய வேண்டும். ஒரு தனி பகுதியை தூய்மையாக வைத்து அங்கே ஐயப்பன் படம் வைத்து, விநாயகர், மாளிகைபுறத்து அம்மன், கருப்பஸ்வாமி, கடுத்தை சுவாமி, ஆழிக்குரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும்.
எல்லா தெய்வங்களுக்கும் அவல் பொரி, வெற்றிலை பாக்கு, சித்திரான்னங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். மிக முக்கியமாக பக்தர்களுக்கு அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும்.
அன்னதானம் செய்ய வேண்டும்
ஐயப்பனுக்கு “அன்னதான பிரபு” என்றொரு நாமம் உண்டு. அதிலும் கன்னி சாமியாக இருப்பவர்கள், வீட்டில் அன்னதானம் அளிப்பது மிகவும் விசேஷமானது. உறவுகளையும் சக கன்னி சாமிகளையும் அழைத்து, பஜனை பாடி, பூஜை செய்து, ஐயப்ப பிரசாதத்தை அன்னதானமாகச் செய்ய வேண்டும். இதை அவரவர்கள் சக்திக்கு ஏற்றபடி செய்யலாம்.
அன்னதானமே பிரதானம்
ஐயப்பனை தினமும் பூஜை செய்துவிட்டு வெளியில் செல்லும்போது தினமும் உங்களால் முடிந்த அளவு ‘அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா’ என்று சொல்லி உணவு வழங்குங்கள். இது ஐயப்பனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் அன்னதானப் பிரபு. அன்னதானத்தில் மகிழ்பவன். அன்னதானம் செய்வோரை வாழச் செய்பவன்.
மாலை போடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
”ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம”
இரு முடிப் பொருட்கள்
ஒரு துணிப் பையில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் ஐயப்பன் சந்நதிக்குத் தேவையான பூஜை பொருட்களையும், ஒரு பகுதியில் தங்களுக்கு வேண்டிய உணவு முதலிய அத்தியாவசியப் பொருட்களையும் ஒன்றுக்கு ஒன்று கலக்காமல் கட்டிக் கொள்ள வேண்டும். அதற்குமுன் யாத்ரா தானம் உண்டு.
மூட்டையை கீழே வைக்கக் கூடாது
யாத்திரை புறப்பட்டு விட்டால், எக்காரணத்தை முன்னிட்டும் ஐயப்பன் தரிசனம் கிடைக்கும் வரை, அந்த மூட்டையை கீழே வைப்பதோ யாத்திரையில் இருந்து திரும்ப வருவதோ கூடாது. இருமுடியில் உள்ள பொருட்களை மஞ்சள் பொடி, சந்தன பாக்கெட், குங்கும பாக்கெட், நெய் தேங்காய் ஒன்று, சுத்தமான பசு நெய், விடலைத் தேங்காய் ஐந்து, (எருமேலி சபரி பீடம், சரங் குத்தி, பதினெட்டாம் படி ஆழி), கற்பூர பாக்கெட், பச்சரிசி பவித்திரம் கெடாமல் கொண்டு செல்ல வேண்டும்.
பயணத்தின் போது சரணம், சரணம்
மலைக்குக் கிளம்பும்பொழுது ஐயப்பனின் திருவடிகளில் மனம் முழுமையாக ஒன்றுபட்டு யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் ஆங்காங்கே குளிக்கும்போது நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். போகும்போது வழியிலோ, திரும்பி வரும்போதோ பிற தெய்வங்களின் கோயில்களுக்குச் செல்பவர்கள் அந்தந்த கோயில் விதிகளை மதிக்க வேண்டும்.
பொது அமைதிக்கு பங்கம் வராமலும், மற்றவர்கள் வழிப்பாடு தங்கள் செயல்களால் கேடாமலும் கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அந்தந்த மூர்த்திகளை வணங்க வேண்டும்.
முதலில் இருமுடி கட்டியவர் ஐயப்பன்
மணிகண்டன் காட்டுக்குப் போகும் போது, அவனுடைய தந்தை ராஜசேகரன், வழியில் ஏற்படும் இன்னல்களில் இருந்து காத்துக் கொள்ள மூன்று கண்களுடைய சிவபெருமானின் அடையாளச் சின்னமான தேங்காய் ஒன்றை எடுத்துச் செல்லும்படி கூறுகிறார். மணிகண்டன் நீளமானதொரு துணி ஒன்றை எடுத்துக்கொண்டு அதனுள்ளே அவல், பொரி, தேங்காய் முதலிய உணவு பொருட்களை வேண்டிய அளவுக்குக் கட்டிக் கொண்டான். வில்லும் அம்புகளும் எடுத்துக் கொண்டான். இருமுடிக்கட்டை தலைமீது சுமந்து கொண்டு அரண்மனையை விட்டுப் புறப்பட்டான்.
சபரிமலை பெரிய பாதை
ஆரம்ப காலத்தில் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து சபரிமலை சென்றடைந்தனர். சபரிமலை யாத்திரையின் உண்மையான அனுபவத்தைப் பெற, ஏறத்தாழ 50 கி.மீ தூரம் கொண்ட இந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று இன்றும் நம்பப்படுகிறது. இந்த பாதை ‘பெருவழி பாதை’, ‘பெரியபாதை’ அல்லது ‘நீண்ட பாதை’ என்று அழைக்கப்படுகிறது.
பெரிய பாதை என்பது எருமேலி, பேரூர் தோடு, காளை கட்டி, அழுதை, அழுதை நதி, கல்லிடுங்குன்று, இஞ்சிப்பாறை- உடும்பாறை, முக்குழி, தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் போன்றவற்றைக் கடந்து பம்பையின் அடிவாரத்தைச் சென்றடையும். காளைகட்டியில் வெடி வழிபாடு செய்து பக்தர்கள் வணங்குவார்கள். அழுதாநதி நீராடி கல்லெடுப்பார்கள். பின்னர் அழவைக்கும் அழுதா மலையில் செங்குத்தாக ஏறுவார்கள்.
பெரியானை வட்டம், சிறியானை வட்டம். இவற்றைக் கடந்தால் பம்பை நதி குறுக்கிடும். இங்கு நீராடி, பூஜைகள் செய்த பின்னரே யாத்திரையைத் தொடங்குவார்கள். இங்கிருந்து தொடங்குவதுதான் சிறிய பாதைப் பயணம்.
சபரிமலை கோவில் அமைப்பு
கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் 1535 அடி உயரத்தில் உள்ளது. கோயில் சிறியது. ஆனால், அழகானது. இயற்கை சூழலில் அமைந்தது. ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத் தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ந்தது போல் இருக்கும்.
இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது. உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோயிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோயில் நம் கண்ணில் தென்படும். 18 படிகள் உண்டு. விரதம் இருப்பவர்கள் மட்டும் 18 படியேறி ஐயப்பனை தரிசிக்கலாம். இப்போது உள்ள ஐயப்பனின் திருக்கோவில் பழமையான கோயில் இருந்த இடத்தில் எழுப்பப் பெற்ற கோயிலாகும்.
பதினெட்டாம் படி
சபரிமலை என்றாலே பதினெட்டாம்படி நினைவுக்கு வந்துவிடும். பதினெட்டாம் படியேறி தரிசனம் செய்வது தான் முறையான தரிசனம். ஆனால், அந்த 18 படிகளை ஏற வேண்டும் என்று சொன்னால், முறையான மண்டல பூஜையும் விரதமும் இருக்க வேண்டும். விரதமும் பூஜையும் முறையாக இல்லாதவர்கள் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும் பதினெட்டாம் படி ஏறி தரிசனம் செய்ய முடியாது.
இந்து சமயத்தில் 18 எண்
இந்திய சமய நெறிகளில் பதினெட்டு என்கின்ற எண் மிக உயர்வானது. புராணங்கள் பதினெட்டு. பகவத் கீதையின் அத்தியாயங்கள் 18. மகாபாரதப் போர் நடந்த தினம் 18. மகாபாரத பருவங்கள் 18. சித்தர்களின் எண்ணிக்கை 18. தமிழில் கீழ்க்கணக்கு நூல்கள் 18.
=====