

அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Kerala Police Launches QR Code Armbands for Children Arriving at Sabarimala Ayyappa Temple : உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து, ஐயப்பனை வழிபட்டு செல்கின்றனர். ஒரு பக்கம் மழை பெய்து வந்தாலும், சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது.
இருமுடி கட்டிவரும் சிறார்கள்
ஆண்டுதோறும் சபரிமலைக்கு வரும் சிறுவர், சிறுமியர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தந்தை அல்லது உறவினர்களுடன் மாலை அணிந்து, இருமுடி கட்டி வரும் சிறார்கள் ஐயப்பனை வழிபடுவதை காண்பதே தனி அழகுதான்.
மின்னணு க்யூஆர் கோடு
கூட்டம் அலைமோதும் போது, சபரிமலையில் வழிதவறிய குழந்தைகளை எளிதில் கண்டறியும் வகையில் அவர்களுக்கு மின்னணு க்யூஆர் கோடுடன் கூடிய கைப்பட்டை அணிவிக்கப்பட்டு வருகிறது. பம்பை கணபதி கோயிலுக்கு அருகில் காவல் சோதனைச் சாவடிக்கு அருகில் குழந்தைகளுக்கு கைப் பட்டைகள் அணிவிக்கப்பட்டு வருகின்றன.
கைப்பட்டையில் முழு விவரம்
இதில் குழந்தையின் பெயர், பெற்றோர் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஞாபகத்திறன் குறைந்த முதியோர் உள்ளிட்டவர்களுக்கும் இது அணிவிக்கப்படுவதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.கைப்பட்டையை சுவாமி தரிசனம் செய்து வாகனங்களில் ஏறும் வரை அகற்றக் கூடாது என்று கேரள காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
அட்டை புழுக்கள் அதிகரிப்பு
சத்திரம் புல்மேடு வனப்பாதையில் மழையினால் அட்டைப் புழுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, புல் நிறைந்த பகுதிகளுக்கு பக்தர்கள் செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை என்பதால், பிளாஸ்டிக் மழை கோட்டை அணிந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, உப்பு, ஷாம்பு பாக்கெட்டுகளை கொண்டு செல்லவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் உடலில் அட்டை ஒட்டினால், இவற்றை அதன் மீது போட்டால் அவை கீழை விழுந்து விடும்.
====