

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்
நினைத்தாலே முக்தி தரும் தலம் தான் திருவண்ணாமலை. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கார்த்திகை தீபத் திருவிழா
அதன்படி, இந்த ஆண்டுக்கான கார்த்தி தீபத் திருவிழா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, அதிகாலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பரணி தீபம் ஏற்றம்
அதனைத் தொடர்ந்து, அதிகாலை 03.30 மணியளவில் ஏகன் அநேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் வகையில், அண்ணாமலையார் சன்னதியில் இருந்து கற்பூர தீபம் கொண்டு வரப்பட்டது.
சிவாச்சாரியார்கள் பஞ்சபூதங்களை விளக்கும் வகையில் ஐந்து தீபங்களை ஏற்றி, அதிலிருந்து ஒரு தீபத்தை கொண்டு வந்து பரணி தீபமாக ஏற்றினர். தொடர்ந்து, அண்ணாமலையார் சன்னதி, அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது.
பக்தர்கள் அனுமதி
பரணி தீபத்தை தரிசிக்க சுமார் ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில், உள்ளூர் பக்தர்கள் 500 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சாராத பக்தர்கள் 500 பேரும் என மொத்தம் 1,000 பக்தர்கள் ஆன்லைன் மூலம் இலவசமாகப் பதிவு செய்து அனுமதி பெற்றனர்.
மேலும், கட்டளைதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலுக்குள் வந்திருந்தனர்.
அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருவண்ணாமலையில் நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 14 கிலோ மீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள்
தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் போக்குவரத்துக் கழகம் 4,827 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
திருவண்ணாமலை மாடவீதிகள் மற்றும் கோவில் பகுதிகளில் 1,180 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கிரிவலத்தை கண்காணிக்கும் AI கேமிராக்கள்
இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் மூலம் காவல்துறை கிரிவலப் பாதை மற்றும் நகரம் முழுவதையும் கண்காணித்து வருகிறது.
அண்ணாமலையார் கோவிலைச் சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பும், திருவண்ணாமலை நகரம் முழுவதும் மூன்று அடுக்கு பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது
இன்று மாலை 6 மணியளவில், கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதை காணவும், கிரிவலம் மேற்கொள்ளவும் சுமார் 10 லட்சம் பேர் திருவண்ணாமலையில் திரளுவார்கள் எனத் தெரிகிறது.
======