

முருகப் பெருமானின் அவதாரம்
தேவர்களை சுரபத்மன் சிறைபிடித்த வைக்க, அவர்கள் மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வீணாகின. ஏனென்றால் மும்மூர்த்திகளால் வெற்றி கொள்ள முடியாத வரத்தை பெற்று இருந்தான் சுரபத்மன். எனவே, சூரனை வெல்ல தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார் சிவபெருமான். அவை சரவண பொய்கையில் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தன.
சூரனை திருத்த முயன்ற முருகன்
அவற்றை பார்வதி தேவி ஒரே குழந்தையாக்க, ஆறுமுகங்கள், 12 கரங்களோடு முருகப் பெருமான் தேவர்களை மீட்க முடிவு செய்தார். சூரபத்மனை கொல்ல வேண்டும் என்று அவர் ஒருபோதும் எண்ணவில்லை. அவனது ஆணவத்தை அடக்கி, தேவர்களை காப்பதே அவரது இலக்கு. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படியும் அறிவுரை கூறி னார் வீரபாகு.
ஆணவத்தின் வடிவம் சூரபத்மன்
சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னிமுகாசுரன், தம்பியான பானுகோபன் ஆகியோரின் வீரம் அவன் கண்களை மறைத்தது.
அவனை அடக்கி ஆட்கொள்ள முடிவு செய்த முருகப் பெருமான், சிக்கலில் தனது தாய் பார்வதியிடம் வேல் வாங்கி, சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்பினார். அவரை சூரனை வதைத்த நாளே கந்த சஷ்டி விழாவாக முருகன் கொவில்களில் கொண்டாடப்படுகிறது.
மாமரமாக நின்ற சூரன்
திருச்செந்தூரில் சூரபத்மனை எதிர்த்த ஜெயந்திநாதர், அவன் செய்த மாயப்போர் முறைகளை ஒவ்வொன்றாக துவம்சம் செய்தார். முருகன் வெல்வது கடினம் என்பதை காலங்கடந்து உணர்ந்த சூரன், பெரிய மாமரமாக நின்று சூழ்ச்சி புரிந்தான்.
கந்த சஷ்டி விழா
எக்காலமும் உணர்ந்த ஜெயந்திநாதர், வீறுக்கொண்டு வேலாயுதத்தை ஏவ மாமரம் இரண்டாக சிதைந்தது. ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி சூரனை ஆட்கொண்டார் முருகப் பெருமான்.
சூரனுக்கு வாழ்வளித்த ஆறுமுகன்
சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூர த்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில், சூரனையும் ஆட்கொண்டு பெரு வாழ்வு தந்தருள்கிறார் ஆறுமுகன். எந்த தெய்வத்திற் கும் இல்லாத சிறப்பு இதுவாகும்.
ஆணவத்தை அகற்றி வாழ்வோம்
அதனால் தான் ""வைதாரையும் வாழவை ப்பவன் முருகன்'' என்று போற்றி வழிபடுவர். கந்தசஷ்டியின் 6 ம் நாளான நாளான இன்று மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, நல்ல எண்ணம் என்னும் மயிலாகமாறி ஆறுமுக ப்பெருமானைத் தாங்கி மகிழ்வோம்.
கந்த சஷ்டியின் சிறப்பு
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டி யாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் இவ்விழாவிற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணம் கூறுகின்றன.
முனிவர்கள், ஐப்பசி மாத அமாவா சை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் துவங்கினர். ஆறு நாட்கள் நடந்த அந்த யாககுண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொருநாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்கள் ஆறாம் நாளில் ஒன்றாக சேர்ந்து முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் கந்தசஷ்டி என்கிறது மகாபாரதம்.
கந்தபுராணம் கூறும் சஷ்டி
கந்தபுராணத்தில் தே”வர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார் இதனை நினைவுறுத்தும் வகையில் ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது” என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
சூரசம்ஹாரம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருச்செந்தூர் திருவிழா தான், இருந்தாலும் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில், திருத்தணியை தவிர்த்து மற்ற இடங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது சிறப்பு.
கந்த சஷ்டி அன்று பாடவேண்டிய பாடல்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..
கந்தா சரணம்.. ஷண்முகா சரணம்....
===============