

சபரிமலை - மண்டல பூஜை
Sabarimala Ayyappa Temple Mandala Pooja 2025 : சபரிமலையில் நேற்று முன்தினம் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அதிகாலை மண்டல பூஜைகள் முறைப்படி தொடங்கின. சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தினமும் 90 ஆயிரம் பேர் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
டிசம்பர் 27ல் மண்டல பூஜை
இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக, தேவசம் போர்டு சில முக்கிய புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளன.
கோவில்நடை 18 மணி நேரம் திறப்பு
மண்டல பூஜைக்காக, கோயில் நடை தினமும் 18 மணி நேரம் திறந்திருக்கும் என்றும், பக்தர்களின் வருகை அதிகரித்தால், நடை சாத்தும் நேரம் நீட்டிக்கப்படும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள், சிறப்பு வசதிகள்
பக்தர்கள், 18ம் படிக்கு மேல் உள்ள சன்னிதானம் பகுதிக்கு செல்போன்களை எடுத்து செல்லவோ, பயன்படுத்தவோ முற்றிலும் தடை
சன்னிதானம் முன்பு புகைப்படம் எடுப்பதும், வீடியோ பதிவு செய்வதும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது
பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிலக்கல் மற்றும் எருமேலி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சுமார் 14,000 வாகனங்களை நிறுத்துவதற்கான பிரம்மாண்ட ஏற்பாடு
பம்பை ஆற்றின் அருகே உள்ள ஹில்டாப் மற்றும் சக்கு பாலம் பகுதிகளில் சுமார் 2,000 சிறிய ரக வாகனங்களை நிறுத்தவும் அனுமதி
பக்தர்களின் பாதுகாப்பிற்காக, இந்த ஆண்டு பணியில் சுமார் 18,741 காவலர்கள்
தமிழக அரசு சார்பில், இன்று முதல் ஜனவரி 16ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள்
தெற்கு ரயில்வே சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்
கோயில் நடை சாத்தப்படும் நாட்கள்
மண்டல பூஜை, டிசம்பர் 27-ம் தேதி நிறைவடைந்ததும், அன்று இரவு கோயில் நடை சாத்தப்படும். பின்னர், மகர விளக்கு பூஜைக்காக, மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படும். மகர விளக்கு பூஜை நிறைவுக்கு பிறகு ஜனவரி 16ம் தேதி கோவில் நடை சாத்தப்படும்.
50 லட்சம் பக்தர்கள் - எதிர்பார்ப்பு
ஆன்லைன் முன்பதிவு கடந்த நவம்பர் 1ம் தேதியே தொடங்கிய நிலையில், டிசம்பர் 1ம் தேதி வரையிலான தரிசனத்திற்கு மட்டும் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருப்பது, இந்த ஆண்டு பக்தர்களின் வருகை வரலாறு காணாத வகையில் இருக்கும் என்பதை காட்டுகிறது. அந்தவகையில் இந்த சீசனில் மட்டும் சபரிமலைக்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் எனத் தெரிகிறது.
====