

சபரிமலை மண்டல பூஜை
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள் இன்று தொடங்கின. நேற்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை சன்னிதானம் திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
நேற்று மாலை 4 மணியளவில் தந்திரி கண்டரர் பிரம்மதத்தன் முன்னிலையில் பழைய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து அவர் 18ம் படி வழியாக இறங்கி ஆழி குண்டத்தில் தீ மூட்டிய பின்னர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்சாந்திகளை சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றார்.
மாலை 6.30 மணியளவில் கோயில் முன் வைத்து சபரிமலையின் புதிய மேல்சாந்தியான சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரிக்கு தந்திரி அபிஷேகம் செய்து ஐயப்பனின் மூல மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார்.
இதேபோல் மாளிகைப்புரம் கோயிலின் புதிய மேல்சாந்தியாக தாமோதரன் நம்பூதிரி பதவியேற்கும் நிகழ்வும் நடைபெற்றது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு கோயில் நடை தாழ்த்தப்பட்டது.
குவியும் ஐயப்ப பக்தர்கள்
மண்டலகால பூஜைகளுக்கு நடைதிறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் சபரிமலையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் நிலக்கல்லில் தங்க வைக்கப்பட்டு இன்று காலை முதல் சுவாமி தரிசனத்திற்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜைகள்
கார்த்திகை 1ம் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்திகள் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில் நடைகள் திறந்ததை தொடர்ந்து மண்டல கால பூஜைகள் முறைப்படி தொடங்கும். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு நடை அடைக்கப்படுவதோடு மண்டல கால பூஜைகள் நிறைவடையும்.
ஜனவரி 14ல் மகரவிளக்கு பூஜை
தொடர்ந்து மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறும்.
கார்த்திகை ஒன்றாம் தேதி இன்று தொடங்கியதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர். இதனால் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
===============