

மார்கழி மாதம் - சிறப்பு
’மாதங்களில் நான் மார்கழி’ என்றார் திருமால். வைணவர்களின் சிறப்பு வாய்ந்த மாதமாக இது கருதப்படுகிறது. இந்த மாதத்தில் இறைவனடி சேருவோர் நேரே வைகுண்டம் செல்வதாக நம்பிக்கை. இந்த மாதத்தில் வைணவ ஆலயங்களில் நாள்தோறும் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
திருச்செந்தூர் முருகன் கோவில்
இந்தநிலையில், முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கோவில் நடைதிறப்பு
இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முருகப் பெருமானை வழிபடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட மாத காலங்களில் மட்டும் அதிகாலையில் கோவில் நடைதிறப்பு மற்றும் பூஜை கால நேரங்கள் வேறுபடும்.
அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு
அதன்படி, மார்கழி மாதத்தை ஒட்டி நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் மாற்றம் செய்யப்படுவதாக கோயிர் நிர்வாகம் அறிவித்துள்ளது. மார்கழி 1ம் தேதியான டிசம்பர் 16-ம் தேதி முதல் மார்கழி 30-ம் தேதியான ஜனவரி 14-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
பூஜை நேரங்களும் மாற்றம்
3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 4.45 மணிக்கு மேல் 5 மணிக்குள் உதய மார்த்தாண்ட தீபாராதனையும், காலை 6 மணிக்கு மேல் கால சந்தி தீபாராதனையும், 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற உள்ளது.
மேலும் மாலை 3.30 மணிக்கு சாயரட்சையும், 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், 7 மணிக்கு ராக்கால தீபாராதனையும், 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை திருக்காப்பிடுதல் பள்ளியறை தீபாராதனை நடைபெறுகிறது.
புத்தாண்டு - அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு
மார்கழி மாதம் 17-ம் தேதி 2026ம் ஆண்டு ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. ஜனவரி 3-ம் தேதி மார்கழி மாதம் 19-ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
============