மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா: 'அறுபத்து மூவர்' உலாவின் சிறப்பு!

Mylapore Kapaleeswarar Temple Panguni Festival 2026 Schedule : ஆன்மீக அன்பர்கள் மற்றும் சிவனடியார்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த விழா, மார்ச் 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
Mylapore Kapaleeswarar Temple Panguni Festival 2026 Schedule Date and Time in Tamil
Mylapore Kapaleeswarar Temple Panguni Festival 2026 Schedule Date and Time in Tamilsource: google
2 min read

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

Mylapore Kapaleeswarar Temple Panguni Festival 2026 Schedule : சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலின் புகழ்பெற்ற பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவின் எட்டாம் நாளில் சிகர நிகழ்ச்சியான ’அறுபத்து மூவர்’ திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும்.

அதன்படி வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ’அறுபத்து மூவர்’ விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

’அறுபத்து மூவர்’ விழா

ஆன்மீக அன்பர்கள் மற்றும் சிவனடியார்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த விழா,மயிலாப்பூர் கோவில் மாட வீதிகளில் அரங்கேற உள்ளது.

’அறுபத்து மூவர்’ விழா நடைபெறும் நேரம்

மார்ச் மாதம் 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 2.30 மணிமுதல் மாலை 3.30 மணிக்குள் சுவாமி புறப்பாடு தொடங்கும்.

வெள்ளி விமானத்தில் வீதி உலா

இந்த விழாவில், முதலில் விநாயகப் பெருமான் வீதி உலா வர, அவரைத் தொடர்ந்து பிரம்மாண்டமான பெரிய வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரரும், மற்றொரு விமானத்தில் கற்பகாம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பர்.

இவர்களைத் தொடர்ந்து சிங்காரவேலவர் மற்றும் சண்டீஸ்வரர் ஆகியோரும் திருவீதி உலாவில் பங்கேற்பர்.

63 நாயன்மார்களின் அணிவகுப்பு

தொடர்ந்து இந்த விழாவின் தனிச்சிறப்பான 63 நாயன்மார்களின் பவனி, 18 கேடயச் சப்பரங்களில் நடைபெறும்.

ஒரு சப்பரத்திற்கு நால்வர் வீதம் அடியார்கள் எழுந்தருள, அவர்களுடன் சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனித்தனிப் பல்லக்குகளில் பின்தொடர்வர்.

மயிலாப்பூர் கோவிலின் வரலாற்றுச் சிறப்பு

மயிலாப்பூரில் பாம்பு தீண்டி உயிரிழந்த சிவநேசரின் மகள் அங்கம்பூம்பாவையாரை, திருஞானசம்பந்தர் தனது பதிகத்தால் உயிர்ப்பித்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், சிவநேசரும் அங்கம்பூம்பாவையாரும் தனித்தனி விமானங்களில் இந்த ஊர்வலத்தில் இடம் பெறுகின்றனர்.

அங்கம்பூம்பாவையார், திருஞானசம்பந்தர் ஆன்மிக கதை

சிவநேசச் செட்டியார் எனும் பெரும் வணிகர் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமான் மீதும் சிவனடியார்கள் மீதும் மிகுந்த பக்தி கொண்டவர்.

சிவநேசரின் எண்ணம்

சீர்காழியில் தோன்றி சைவ சமயத்தைப் பரப்பி வந்த திருஞானசம்பந்தரின் புகழைக் கேட்ட சிவநேசர், அவர்பால் ஈர்க்கப்பட்டு தன் மகள் அங்கம்பூம்பாவையைச் சம்பந்தருக்கே மணம் முடித்து வைக்க வேண்டும் என்று மனதிற்குள் உறுதி பூண்டிருந்தார்.

அங்கம்பூம்பாவையை தீண்டிய நாகம்

ஒருமுறை அங்கம்பூம்பாவை தோழிகளுடன் நந்தவனத்தில் மலர் பறித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு நச்சுப் பாம்பு அவரைத் தீண்டியது.

அங்கேயே அந்தப் பெண் உயிரிழண்ட் மகளின் இழப்பால் துடித்த சிவநேசர், "என் மகள் சம்பந்தருக்கு உரியவள்" என்று கூறி, அவளது உடலைத் தகனம் செய்து, எஞ்சிய எலும்புகளையும் சாம்பலையும் ஒரு மண்பானையில் சேகரித்து வைத்தார்.

அந்தப் பானையைத் தினந்தோறும் மலர்களால் அர்ச்சித்து, சம்பந்தரின் வருகைக்காகக் காத்திருந்தார்.

மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர்

சில காலம் கழித்து, திருஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளினார். இந்தச் செய்தியை அறிந்த சிவநேசர், கண்ணீருடன் அவரைச் சந்தித்து நடந்ததைக் கூறினார்.

அந்த மண்பானையைக் கபாலீஸ்வரர் கோவில் வாயிலுக்குக் கொண்டு வரச் சொன்னார் சம்பந்தர்.

திருஞானசம்பந்தர் பாடிய பாடல்

கபாலீஸ்வரர் கோவில் கோபுரத்தின் முன் அந்தப் பானை வைக்கப்பட்டது. அப்போது திருஞானசம்பந்தர், இறைவன் மேல் "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை..." என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

அந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், "மயிலையில் நடக்கும் திருவிழாக்களையும், பூசைகளையும் காணாமல் போவது முறையோ பூம்பாவாய்?" என்று வினவினார்.

அங்கம்பூம்பாவை உயிர்த்தெழுந்த அதிசயம்

பதிகத்தின் பத்தாவது பாடலைப் பாடி முடித்ததும், ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. அந்த மண்பானை உடைந்து, அதிலிருந்து பன்னிரண்டு வயதுப் பெண்ணாக அங்கம்பூம்பாவை உயிர்த்தெழுந்து வெளியே வந்தார்.

கூடியிருந்த மக்கள் அனைவரும் "ஹர ஹர மகாதேவா" என்று முழக்கமிட்டு இந்த அற்புதத்தைக் கண்டு வியந்தனர்.

அறுபத்து மூவர் விழாவின் சிறப்பு

இந்த மகத்தான நிகழ்வை நினைவுகூரும் வகையில் தான், இன்றும் மயிலாப்பூர் அறுபத்து மூவர் விழாவின் போது சிவநேசச் செட்டியாரும், அங்கம்பூம்பாவையாரும் தனித்தனி விமானங்களில் நாயன்மார்களுடன் பவனி வருகின்றனர்.

பக்தர்களுக்கு வசதிகள்

இந்த அறுபத்து மூவர் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால், மயிலாப்பூர் மாட வீதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் மற்றும் அன்னதானத்திற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த விழாவைக் காண வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்னைக்கு வருகை தருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in