

தை மாத மௌனி அமாவாசை
Thai Month Mauni Amavasya 2026 Date and Time in Tamil : ஒவ்வொரு மாத அமாவாசையும் முக்கியமான நாள். முன்னோர்களை வழிபடும் நாள் என்றாலும், சில மாதங்களில் வரும் அமாவாசை தனிச்சிறப்பு வாய்ந்தது. அதில் ஒன்று தான் மௌனி அமாவாசை. ஓராண்டில் வரும் அமாவாசை திதிகளில் மிகவும் முக்கியமான அமாவாசை இது ஆகும்.
மௌனி அமாவாசை நாளில் முன்னோர் காரியம், தர்ப்பணம் செய்வது மட்டுமில்லாமல், மௌன விரதம் இருப்பது, புனித நதிகளில் நீராடுவது மற்றும் தானம் செய்வது ஆகியவை நற்பலன்களை தரும்.
கங்கையில் நீராடல் - பாவங்கள் தொலையும்
மௌனி அமாவாசையில் கங்கையில் நீராடுதல், முக்கூடல் சங்கமம், புண்ணிய நதிகளில் மற்றும் கடலில் நீராடுவதால் பாவங்கள் தொலைந்து ஆத்மா மோட்சம் அடைய உதவுகிறது என்று நம்பப்படுகிறது.
ஜன.18ல் தை அமாவாசை
பஞ்சாங்கத்தின்படி, 2026 இல் மௌனி அமாவாசை ஜனவரி 18, 2026 ஞாயிறு அன்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை வெகு விசேஷமானதாகும். மௌனி அமாவாசை என்பது தமிழ் பஞ்சாங்கத்தின் படி தை மாதம் வரும், தை அமாவாசை ஆகும்.
உத்திராயன முதல் அமாவாசை
தேவர்களின் பகல் காலமான உத்திராயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாளில், முன்னோர்களுக்கான காரியம் மட்டுமில்லாமல், மௌன விரதம் கடைபிடிப்பது வழக்கமாக உள்ளது.
அமாவாசை நேரம்
ஜனவரி 18 அன்று காலை 10:14 மணிக்கு தொடங்கி ஜனவரி 19, அன்று காலை 7:14 மணி வரை நீடிக்கும். சர்வார்த்த சித்தி யோகம் தோன்றும் நாளில் செய்யும் செயல்கள் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும்.
இது தவிர சூரியன் மகர ராசியில் இருப்பார், மேலும் சந்திரன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுவார். இந்த யோகங்கள் புண்ணிய நீராடல் மற்றும் தானம் செய்வதால் கிடைக்கும் பலன்களை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும்.
புண்ணிய நதிகளில் நீராடும் நேரம்
மௌனி அமாவாசை நாளில் புண்ணிய நதிகள், சங்கமம், கடலில் நீராட, பிரம்ம முகூர்த்தம் உகந்த நேரமாகும். ஜனவரி 18, ஞாயிறு அன்று காலை 5:27 மணி முதல் காலை 6:21 மணி வரை புண்ணிய நீராடலாம்.
அபிஜித் முகூர்த்தம் பகல் 12:10 மணி முதல் பகல் 12:53 மணி வரை இருப்பதால், இதற்கு முன்பு தர்ப்பணம் செய்து, கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
ஞாயிறு அன்று, ராகு கால நேரத்தில் முக்கியமான எந்த வேலையையும் செய்ய வேண்டாம், அதாவது மாலை 4:29 மணி முதல் மாலை 5:49 மணி வரை ராகு காலம் இருக்கும்.
மௌனி அமாவாசையின் பூர்ணவத்துவம்
இந்துக்களின் புனிதமான நதியான கங்கை நதியின் நீர், மௌனி அமாவாசை அன்று அமிர்தமாக மாறும் என்று நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாக மௌனி அமாவாசை அன்று கங்கையில் புனித நீராடுவதற்கான மிக முக்கியமான நாள் என்று கூறப்படுகிறது.
திரிவேணி சங்கமம் - மோட்சம் கிடைக்கும்
மௌனி அமாவாசையில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதால் மோட்சம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாகர மன்னரின் 60,000 மகன்களும் கங்கையில் நீராடி முக்தி பெற்றனர் என்பது புராணக் கதை. எனவே மௌனி அமாவாசையான தை அமாவாசை அன்று, நதிகளில் புனித நீராடி, முன்னோர்களை வழிபட்டு, முடிந்த அளவு மவுன விரதத்தை கடைபிடித்து இறையருளை பெறுவோமாக.....
============