

வைகுண்ட ஏகாதசி
Tirupati Tirumala Vaikunta Ekadashi 2025 : திருப்பதியில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. வைணவ ஆலயங்களில் இந்தத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வரும் 30ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
ஆகம விதிகளின்படி தூய்மைப்பணி
இதற்காக திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் ஆகம விதிகளின்படி சுத்தம் செய்யப்பட்டது. இது வழக்கமாக மேற்கொள்ளப்படும் பாரம்பரிய முறையாகும்.
கருவறை முதல் நுழைவாயில் வரை
கோவில் கருவறை முதற்கொண்டு, கொடிக் கம்பம், பலி பீடம், உப சன்னதிகள், விமான கோபுரம் என அனைத்து இடங்களிலும் பன்னீர், பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றை கலந்து செய்யப்பட்ட வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்டது.
ஆழ்வார் திருமஞ்சன சேவை
இந்தப் பணிகள் நிறைவு பெறும் வரை, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆழ்வார் திருமஞ்சன சேவை முடிந்த பிறகே, பக்தர்கள் மலையப்ப சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆழ்வார் திருமஞ்சன சேவை என்றால் என்ன?
திருமஞ்ஞனை என்பது திருமஞ்சனம் என்று மாறி விட்டது. திரு என்றால் ஸ்ரீ, மஞ்சனை என்றால் குளியல் அதாவது சுப ஸ்நானம் என்று பொருள். ஆழ்வார்கள் திருமாலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவருடைய இதயத்தில் குடி கொண்டிருப்பவர்கள். எனவே, திருமஞ்சன சேவை, ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது.
நான்கு முறை திருமஞ்சனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் நான்கு முறை திருமஞ்சனசேவை நடைபெறுகிறது. உகாதி ( தெலுங்கு வருடப் பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவங்கள், வைகுண்ட ஏகாதசியின் போது இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. முழு கோவிலையும் சுத்தம் செய்யும் பணி, ஒரு யாகம் போல பக்தி சிரத்தையுடன் மேற்கொள்ளப்படுகிறது.
திருமஞ்சன சேவையில் பக்தர்கள்
கருவறையில் உள்ள உற்சவர் சிலைகள், தங்கம், வெள்ளி பாத்திரங்கள் அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன. கோவிலின் அனைத்து சுவர்களும், மணம் மிக்க சிறப்பு கலவையால் பூசப்பட்டு, பின்னர் தண்ணீரால் தூய்மைப்படுத்தப்படும். இந்தப் பணியில் பக்தர்களும் பங்கேற்று புண்ணியம் பெறலாம்.
30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு
30ம் தேதி அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் அந்த வழியாக சென்று பெருமாளை தரிசிப்பார்கள். அடுத்த 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
================