

பொங்கல் நன்னாளில் சூரிய வழிபாடு
Thai Pongal Festival 2026 Sun God Worship Benefits in Tamil : உழவுத் தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது சூரிய பகவான். சூரிய வெப்பமே ஆவியாகிக் குளிர்ந்து, கருமேகமாக மாறி மழையாக பொழிகிறது. இதன் காரணமாகவே தைப்பொங்கல் அன்று சூரியனை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒளிமிக்க சூரிய பகவான்
உலகில் சூரியனைக் காட்டிலும் ஒளி வடிவம் வேறு ஒன்று கிடையாது. சிவபெருமானை நோக்கி தவம் செய்து நவக்கிரக பதவியும், ஒளி மண்டலத்தில் ஆயிரம் கிரகணங்களோடு விளங்கும் பேற்றையும் அடைந்தவர் சூரிய பகவான்.
இந்த ஆயிரம் கிரகணங்களில் 400 கிரகணங்கள் மழை பெய்வதற்கும்,300 கிரகணங்கள் மழை வளம் உண்டாவதற்கும், 300 கிரகணங்கள் பனி செய்வதற்கும் பயன்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.
நவக்கிரக நாயகன் சூரியன்
நவகிரகங்களில் சூரியனே நாயகனாக போற்றப்படுகிறார். மும்மூர்த்திகளின் பிரதிநிதியாக கண்கண்ட தெய்வமாக இருப்பவர் சூரியனே. வேத மந்திரங்களில் காயத்ரி மந்திரத்திற்கு உரியவர் சூரியன். சூரிய நமஸ்கரம் எனும் இவருடைய வழிபாடு மிகவும் சிறப்புடையது.
ராமனின் வெற்றியில் சூரிய பகவான்
ராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்த போது, ராமனின் அம்புகள் ராவணனினை தலைகளை கொய்தாலும், அவை மீண்டும் மீண்டும் ஒட்டிக் கொண்டன. அப்போது அங்கு வந்த அகத்தியர், ஆதித்ய ஸ்ருதி ஸ்தோத்திரம் எனும் சூரிய மந்திரத்தை ராமருக்கு உபதேசிக்க, அதன் பிறகே அவர் ராவணனை வெற்றிக் கொண்டார்.
மூவகை நெருப்புகளில் ஒன்று சூரியன்
வேதங்களில் பல இடங்களில் சூரியனின்புகழ் பாடப்படுகிறது. மூவகை நெருப்புகளில் ஒன்றாக சூரியனை ரிக் வேதம் புகழ்கிறது. மிகப் பழைமையான தமிழ் நூலான தொல்காப்பியத்தில் சூரிய மண்டலம், 'வெஞ்சுடர் மண்டலம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் சூரியன் கோயில் 'உச்சிக்கிழான் கோட்டம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
சூரியனுக்கு பல்வேறு பெயர்கள்
ஸ்ரீராமர் பிறந்த ரகுவம்சம் சூரியனை முதன்மையானவராகக் கொண்டது. அனுமன் சூரிய பகவானிடம்தான் புனித நூல்களை கற்றறிந்தார் என்கிறது ராமாயணம். பாரதியார் தனது தெய்வப் பாடல்கள் வரிசையில் சூரியனை முதன்மைப்படுத்தி பாடியுள்ளார். சூரியனுக்கு பரிதி, ஞாயிறு, பகலவன், கதிரவன், தினகரன், ஆதித்தன், ரவி என்று பெயர்கள் உள்ளன.
சூரிய பகவானின் சிறப்புகள்
ஆணுக்கு வேண்டிய வீரம், பராக்கிரமம், ஆண்மையை தருபவர், பெண்ணுக்கு கற்பு நெறியை அருள்பவர் இவரே. இவர் சிம்ம ராசியில் ஆட்சி பெறுகிறார். சித்திரையில் உச்சம் பெறுகிறார். இவருக்கு உரிய நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திராடம்.
சூரியனை வழிபடும் நாட்கள்
சூரியனை பொங்கல் திருநாள் மற்றும் ரத சப்தமி நாளில் மட்டுமின்றி, ஆவணி ஞாயிறு, ஆடி மாதம் கடைசி செவ்வாய், கார்த்திகை சோமவாரம், தை மாத அஷ்டமி திதி, மாசி மாத மகாசிவராத்திரி ஆகிய நாட்களிலும் வழிபடலாம். சூரியனை வழிபடும் மார்க்கத்தை இந்து மதத்தில் ‘செளரம்’ என்பர்.
வளம் கொழிக்கும் சூரிய வழிபாடு
ஆதித்தன் எனும் சூரிய பகவானை தைத்திருநாள் அன்று பூஜிப்பதால் பண வரவும், தான்ய லாபமும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, இயற்கை வளங்களை நமக்கு அள்ளிக் கொடுத்து வழிகாட்டும், சூரிய பகவானை, தை திங்கள் பொங்கல் நாளன்று வழிபட்டு, அனைத்து பேறுகளையும் பெறுவோமாக...
---------------------