

அயோத்தி ராமர் கோவில்
PM Modi Hoisting Saffron Flag in Ayodhya Ramar Temple : உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. முழுவீச்சில் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி பக்ர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
இதற்கான பிராண பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ராமரை வழிபட்டு செல்கிறார்கள்.
கட்டுமான பணிகள் நிறைவு
இதன் பிறகு அயோத்தி, மற்றொரு பிரம்மாண்ட விழாவை இன்று கொண்டாடியது. அது என்னவென்றால் ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் நடைபெற்ற கொடியேற்றும் விழாவாகும்.
கோவில்களில் பிரதமர் வழிபாடு
இன்று காலை அயோத்தி வந்த பிரதமர் மோடி, மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
ராமர் கோவிலில் சூரியக் கொடி
பின்னர் ராமர் கோவிலுக்கு வந்த அவர், பால ராமரை தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து, கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் காவிக் கொடியை அவர் ஏற்றி வைத்தார். ராமபிரான் அவதரித்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் கோவிதார மரம் பொறிக்கப்பட்ட காவிக் கொடி கோவில் கோபுரத்தில் பட்டொளி வீசி பறக்கிறது.
மார்கழி பஞ்சமி திதியில் கொடியேற்றம்
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சிக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ராமர் மற்றும் சீதாயின் விவாக பஞ்சமி திதியுடன் அபிஜித் முகூர்த்தமும் ஒன்றாக வரும் மார்கழி மாதத்தின் பஞ்சமி திதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10 அடி உயரம் கொண்ட கொடி
பத்து அடி உயரமும், இருபது அடி நீளமும் கொண்ட இந்த செங்கோண அமைப்பிலான முக்கோணக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய வட இந்திய நாகரா கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் சிகரத்தின் உச்சியில், இந்தக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ராமர் கதையை கூறும் கற்சிற்பங்கள்
கோயிலின் பிரதான வெளிப்புறச் சுவர்களில், வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட பகவான் ராமரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட 87 நிகழ்வுகள், கற்களில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களின் அருகே இந்தியக் கலாச்சாரத்திலிருந்து எடுக்கப்பட்ட 79 வெண்கல வார்ப்பினாலான காட்சி அமைப்புக்களும் இடம்பெற்றுள்ளன.
=================