

சபரிமலையில் மண்டல பூஜை
Sabarimala Ayyappa Temple Crowd : கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் மண்டல பூஜை இறுதி விழாக்கள் நடைபெற இருக்கின்றன.
வார இறுதியில் வருகை குறைவு
வழக்கமாக, வார இறுதி நாள்களில் தான் அதிக பக்தர்கள் வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு பெரும் கூ ட்டத்தை தவிர்க்க வார வேலை நாட்களை பெரும்பாலான பக்தர்கள் தேர்ந்து எடுத்தனர். அதன் காரணமாக, வாரயிறுதி நாள்களில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
அலைமோதும் பக்தர்கள்
அதேசமயம், திங்கள் முதல் வெள்ளி வரை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த ஆண்டு மண்டல பூசை நடைபெற்ற போது இதே காலகட்டத்தில் 21 லட்சம் பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.
25 லட்சம் பேர் தரிசனம்
ஆனால் இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 4 லட்சம் அதிகரித்து 25 லட்சம் பக்தர்கள் வரை ஐயப்பனை தரிசனம் செய்திருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதியவர்கள் அதிகமாக வருகை
புதிதாக சபரிமலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே எண்ணிக்கை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் முன்கூட்டியே தேதிகளை பதிவு செய்துகொண்டு, தரிசனத்துக்கு வரும்போது, அவர்கள் தரிசனம் செய்ய போதிய அவகாசம் கிடைக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
விரைவான, அமைதியான தரிசனம்
இம்மாத இறுதியில் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று சபரிமலை நிர்வாகம் எதிர்பார்க்கிறது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், பக்தர்களின் விரைவான தரிசனத்திற்கு தேவையான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.
காட்டு வழியாக அதிகம் பேர் வருகை
எருமேலி, அழுதக்கடவு காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. தற்போது சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பாரம்பரிய வனப் பாதைகள் வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 1,02,338 பக்தர்கள் பல்வேறு வனப் பாதைகள் வழியாக சன்னிதானத்தை அடைந்துள்ளனர்.
8ம் தேதி 1,00,844 பேர் தரிசனம்
கடந்த 8-ந் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர். அதே போல் கடந்த மாதம் 24-ந் தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 867 பேர் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது .
=====