சபரிமலை சன்னிதானம் நடை இன்று திறப்பு : மண்டல பூஜைக்காக ஏற்பாடுகள் தீவிரம்...

மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் சபரிமலை கோவில் நடை; நாளை முதல் தினமும் 80,000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
Sabarimala Temple to Open Today: Preparations Underway for Mandala-Makaravilakku Pilgrimage Season
Sabarimala Temple to Open Today: Preparations Underway for Mandala-Makaravilakku Pilgrimage SeasonAi Generated
1 min read

இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை:

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு யாத்திரை சீசனை முன்னிட்டு இன்று (நவம்பர் 16) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், தற்போதைய மேல்சாந்தி ஈ.டி. பிரசாத் நம்பூதிரி கோவில் நடையைத் திறந்து கருவறையில் தீபம் ஏற்றுகிறார்.

இதனை தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சபரிமலை கோவிலின் புதிய மேல்சாந்தியாக அரீக்கரா சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரியும், மாளிகைப்புறம் கோவிலின் புதிய மேல்சாந்தியாக ஏ. தாமோதரன் நம்பூதிரியும் பொறுப்பேற்க உள்ளனர்.

நாளை முதல் மண்டல கால வழிபாடு தொடக்கம்:

இன்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டாலும், மண்டல காலத்திற்கான வழிபாடுகள் நாளை (நவம்பர் 17) அதிகாலை 3 மணிக்குத் தொடங்குகின்றன.

இதையொட்டி, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தர உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடுவது வழக்கம்.

ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி:

இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், நாளை முதல் தினமும் அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் 60 ஆயிரம் பேர் ஆன்லைன் விர்ச்சுவல் கியூ மூலமாகவும், நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலும், எருமேலி மற்றும் புல்லுமேடு வனப்பாதைகள் வழியாக தலா 3 ஆயிரம் பேருக்கும், வண்டிப்பெரியாறு சத்திரம் வழியாக 2 ஆயிரம் பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு :

யாத்திரை காலத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். காலை 3.30 மணி முதல் 11 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும்.

மதிய பூஜைக்கு பிறகு பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்குத் திறக்கப்படும் இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் நடை அடைக்கப்படும் .

=======================