

அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் :
Sabarimala Ayyappan Arupadai Veedu 2025 : கார்த்திகை மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அங்கு கூடும் கூட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணமே தான் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அலைமோதும் கூட்டமானது அரை நாளில் 97 ஆயிரம் பக்தர்கள் அலைமோதுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
அறுபடை வீடுகள்
இதில் பதிதாக முருகப்பெருமானுக்கு இருப்பது போலவே ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள்(Ayyappan 6 Padai Veedu) உள்ளது என்று தெரியவந்துள்ளது. அதன்படி முதல் கோவிலில் இருந்து 6 வது கோவில் வரை பார்க்கலாம்.
குளத்துபுழா
குளத்துபுழா (பால சாஸ்தா) குளத்துப்புழாவில் ஐயப்பன் குழந்தை வடிவில் பால சாஸ்தாவாக அருள் பாலிக்கிறார். இந்த கோவில் கருவறை வாசலின் உயரம், குழந்தைகள் நுழையும் அளவிற்கு மிகச் சிறியதாக இருக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சி
பெரும்பாலான ஐயப்பன் கோவில்களில் பிரம்மச்சாரியாக அருள் பாலிக்கும் ஐயப்பன் இந்த கோவிலில் மட்டுமே குழந்தை வடிவில் அருள் பாலிக்கிறார். இவரை ஒருமுறை தரிசித்தாலே குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். விஜயதசமியன்று இங்கே வித்யாரம்பம் சிறப்பாக நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
நிச்சயம் திருமணம் நடக்கும்
ஆரியங்காவு (கல்யாண சாஸ்தா/அரச கோலம்) கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் சுவாமி திருமண கோலத்தில் காட்சி தருகிறார். ராஷ்டிர குல தேவியான புஷ்கலையுடன் அரச கோலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இங்கு ஐயப்பனுக்கும் புஷ்கலை தேவிக்கும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் கல்யாண உற்சவம் நடக்கும் காட்சி மிகவும் விசேஷமானது.
மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மீது அமர்ந்த காலத்தில் இருப்பதால் இவருக்கு ‘மதகஜ வாகன ரூபன்’ என்கிற பெயரும் உண்டு. திருமணத் தடைகள் இருப்பவர்கள், திருமணம் தாமதமாகி வருபவர்கள் இந்த கோவிலில் வழிபாடு நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
அச்சன்கோவில் வழிபாடு சிறப்பு
மூன்றாவதாக, அச்சன்கோவில் (கல்யாண சாஸ்தா/வனராஜன்) அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஐயப்பன் வனராஜனாக அமர்ந்த கோலத்தில் கையில் அமுதமும், காந்தமலை வாளும் ஏந்தி காட்சி தருகிறார். இவருக்கு இருபுறமும் பூர்ண கலா, புஷ்கலா தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர்.
இவரை ‘கல்யாண சாஸ்தா’ என்றும் அழைக்கிறார்கள். திருமணத் தடைகள் நீங்க விரும்புபவர்கள் இந்த தலத்தில் வழிபடுவது சிறப்பு. இந்த திருத்தலம் இறைவர் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
இங்கு இருக்கும் விக்ரகம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்தக் கோயிலில் வழிபடுபவர்களுக்கு இறைவன் கவலை, வீண் பயம், அச்சம் ஆகியவற்றை போக்குவார் என்பது நம்பிக்கை உண்டு.
பந்தளத்தில் காக்கப்படும் ஆபரணங்கள்
பந்தளம் (மணிகண்ட பாலகன்) இங்கு ஐயப்பன், மணிகண்ட பாலகனாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். ஐயப்பன் பந்தள மன்னன் ராஜசேகரனால் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்ட இடமாகும்.
பந்தள மன்னன் கட்டிய ஆலயமும் இந்த இடத்தில் அமைந்துள்ளது. சபரிமலை மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு ஆபரணங்கள் இங்கு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வாவருடன் ஐயப்பன்
எருமேலி (வேட்டைக்காரன்) இங்கு ஐயப்பன் வில், அம்பு ஏந்திய வேட்டைக்காரன் போன்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மகிஷியை வதம் செய்த தலம் இது என்பதால் இது ‘எருமைக்கொல்லி’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் எருமேலி என்றானது. சபரிமலை யாத்திரையின் போது பக்தர்கள் இங்கு ‘பேட்டைத் துள்ளல்’ என்னும் நடனத்தை ஆடியபடி சபரிமலைக்கு செல்வது வழக்கம். இங்கு ஐயப்பனின் தோழர் வாவரின் பள்ளிவாசல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அறுபடை வீடுகளுடன் ஐயப்பன்
சபரிமலை (தர்மசாஸ்தா) இங்கு ஐயப்பன் யோக சின்முத்திரை தாங்கி, தர்மசாஸ்தாவாக அருள் பாலிக்கிறார். ஐயப்ப பக்தர்களின் இறுதி இலக்கும், முக்கிய திருத்தலமும் சபரிமலையே ஆகும். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக ஐயப்பன் இங்கு காட்சி தருகிறார்.
18 படிகள் ஏறிச் சென்று இவரை தரிசிப்பது கோடி புண்ணியமாகும். ஐயப்பன் பிறந்தது, வளர்ந்தது, பாலகனாக நின்றது, மகிஷியை வதம் செய்தது, வதம் முடித்து தியானம் செய்தது என இந்த அறுபடை வீடுகளும் உலகப் பிரசித்தி பெற்ற இடங்கள் ஆகும்.
வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற ஐயப்பனின் இந்த அறுபடை வீடுகளையும் ஒரு முறையாவது தரிசித்து் அருள் பெற்று செல்லுங்கள்.