

Sabarimalai Pilgrimage Kerala Health Department Guidelines Emergency Helpline
சபரிமலை மண்டல காலத்தை முன்னிட்டு, மலையேறும் ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும், அவசர உதவி எண்ணையும் கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
சபரிமலை மண்டல காலத்தை முன்னிட்டு புதிய வழிகாட்டுதல்கள்
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் தொடங்கியுள்ள நிலையில், நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மலையேறும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மருத்துவர் ஆலோசனை மற்றும் மருந்துகள் குறித்த அறிவுறுத்தல்கள்
1. இதய நோயாளிகள் கவனத்திற்கு
இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் சபரிமலை பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகக் கட்டாயம் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டோர், இதய அறுவை சிகிச்சை மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்தோர் மருத்துவர்களின் அனுமதியின்றி மலையேறக் கூடாது.
2. மருந்துகளை நிறுத்தக் கூடாது
ஏற்கனவே வழக்கமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மருந்துகளை 'விரதம்' என்ற பெயரில் நிறுத்தக் கூடாது.
தங்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் அதற்கான மருத்துவக் குறிப்புகளை பக்தர்கள் எப்போதும் தங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
மலையேறும் போது கடைப்பிடிக்க வேண்டியவை
மலையேறும் போது அதிக வேகம் கூடாது.
ஆங்காங்கே சற்று ஓய்வெடுத்த பின்னரே தொடர்ந்து மலையேற வேண்டும்.
கூட்டத்திற்கு இடையில் முண்டியடித்து நுழைந்து ஏறுவது, ஓடுவது போன்ற செயல்களில் பக்தர்கள் ஈடுபடக் கூடாது.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றில் மலையேறக் கூடாது.
அவசர அறிகுறிகள் மற்றும் மருத்துவ உதவி எண்
மலையேறும் போது...
நெஞ்சுவலி
மூச்சடைப்பு
நெஞ்சில் பாரம் போன்ற உணர்வு
மாறுபட்ட உடல்நிலை
அதிகமான வியர்வை
இதயத் துடிப்பில் வித்தியாசம்
திடீரென்று ஏற்படும் அதிக சோர்வு
கை மற்றும் தாடை எலும்புகளில் வலி
போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மலையேறுவதை நிறுத்திவிட்டு அங்கேயே அமர்ந்து மருத்துவ உதவி பெற வேண்டும்.
அவசர உதவி எண்
பக்தர்களின் வசதிக்காகப் பாதை நெடுகிலும் தேவையான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சபரிமலை பயணத்தின் போது மருத்துவ உதவி தேவைப்படுவோர் 04735 203232 என்ற அவசர உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
======================