

கந்த சஷ்டி விழா
Tiruchendur Kanda Sashti Soorasamharam குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகப் பெருமான் கோவில்கள் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று.
இந்தாண்டு கந்தசஷ்டி விழா கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
கோவிலில் விரதம் இருக்கும் பக்தர்கள்
கஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர்.
நாளை சூரசம்ஹாரம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6ம் திருநாளான 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை யாகசாலையில் நடைபெறும் தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
கடற்கரையில் எழுந்தருளும் ஜெயந்திநாதர்
அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள். மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார்.
சூரசம்ஹார நிகழ்ச்சி
கடற்கரையில் அவர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் திருநாளான 16ம்தேதி மாலை 6 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
கந்தசஷ்டி விழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்
14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்களும் மதுரை, நெல்லை, கோவில்பட்டி, பாபநாசம், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, திசையன்விளை, ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து 305 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வருகையைப் பொறுத்து எண்ணிக்கை மேலும் கூடுதலாக பேருந்துகள் இயக்கிடவும் போக்குவரத்துக் கழகம் தயாராக உள்ளது.
திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்
இதே போல தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் சார்பில், வரும் 15-ம் தேதி நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன
இந்த ரயில் நெல்லையில் இருந்து 03.20 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து மறுமார்க்கமாக அன்று மாலை இரவு 07.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 08.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.
எழும்பூர் – திருச்செந்தூர் சிறப்பு ரயில்
நவம்பர் 14 இன்று மாலை 4.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை அதிகாலை 4.00 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
மறுமார்க்கமாக நாளை இரவு 10.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்,16ம் தேதி நண்பகல் 12.00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
=================