

ஆருத்ரா தரிசனம்
Arudra Darshan 2026 Thiruvadhirai Nombu in Tamil : ஆருத்ரா தரிசனம் என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜப் பெருமானை (ஆடல் அரசன்) தரிசனம் செய்யும் ஒரு புனிதமான நிகழ்வாகும்.
சிவபெருமான் - பார்வதி திருமணம்arudra darisanam 2026
சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் இடையிலான திருமணத்தைக் குறிக்கும் உன்னதமான நாள் இது. மேலும் சேந்தனார் என்ற சிவனடியாரின் பக்தியை உலகிற்கு உணர்த்திய தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
ஆதியும், அந்தமும் இல்லாத சிவன்
ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாக திகழும் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. மற்ற தெய்வங்கள் அனைத்திற்கும் ஜெயந்தி விழா கொண்டாடினாலும், சிவ பெருமானுக்கு அப்படி கொண்டாடுவது கிடையாது. பிறப்பும், இறப்பும் இல்லை என்று சொல்லப்படும் ஈசனுக்கும் திருவாதிரை நட்சத்திரத்திற்கும் என்பதை பார்க்கலாம்.
”திரு” சிவனும் பெருமாளும்
27 நட்சத்திரங்களில் "திரு" என சிறப்பித்து கூறப்படுவது சிவ பெருமானுக்குரிய திருவாதிரை. மற்றொன்று பெருமாளுக்குரிய திருவோணம் தான்.
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
களி உண்ண சிவபெருமான் வந்த தினம்
"பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்." என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானை போற்றுகிறது. சேந்தனார் என்ற அடியவரின் வீட்டுக்கு களி உண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் திருவாதிரை நாள்.
இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவ பெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
உயிரை மீட்ட திருவாதிரை திருநாள்
திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. 3வது நாளில் அவரது கணவன் இறந்தான். கலங்கி துடித்த திரேதாயுகா, பார்வதிதேவியிடம் முறையிட, எமதர்மனை சிவபெருமான் கோபப்பார்வையால் சுட்டெரித்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அந்தநாள் தான் திருவாதிரை திருநாள்.
சிவ தரிசனம், கோடி புண்ணியம்
இந்த நல்ல நாளில் சிவனை மனம் உருக வேண்டினால், நமக்கும் சிவ தரிசனம் கிடைக்கும். அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவ பெருமான் எத்தனையோ திருவிளையாடல்கள் நிகழ்த்தி இருந்தாலும், தன்னுடைய பக்தருக்காக தானே மனம் இறங்கி வந்து, அருள் செய்ததால் இந்த திருவாதிரை சிவபெருமானுக்குரிய தினமாக திகழ்கிறது.
சிவனின் ஆனந்த தாண்டவம்
திருவாதிரை களி படைப்பது, திருவெம்பாவை நோன்பு நோற்பது, மற்றும் அதிகாலை அபிஷேகம் ஆகியவை ஆருத்ரா விழாவின் முக்கிய அம்சங்கள்.
'திருவாதிரை' என்ற நட்சத்திரத்தில் சிவபெருமானின் நடன தரிசனத்தைக் காண்பதால் இது ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
திருவெம்பாவை நோன்பு
சிவபெருமானின் ஆனந்த தாண்டவ தரிசனத்தை பெறுவதற்கான சிறந்த நாள் இது. மார்கழி திருவாதிரையை ஒட்டி, பத்து நாட்கள் திருவெம்பாவை நோன்பு நோற்பார்கள், இது திருவாதிரை நாளில் நிறைவு பெறும்.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளை
"ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"
திருநாவுக்கரசரும் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை விழாவின் சிறப்பினையும் அழகையும் பாடியுள்ளார்.
"முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பக்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தனாரூ ராதிரை நாளா லதுவண்ணம்"
சிதம்பரம் நடராஜர் அபிஷேகம்
கோவில்களில், குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோயிலில், அதிகாலையில் நடராஜருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும். இந்த நாளில் நடராஜப் பெருமானை தரிசிப்பது, பன்மடங்கு பலன்களை தரும்.
மூலவர் வந்து பக்தர்களுக்கு காட்சி
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பு.
வேறு எந்த கோவில்களிலும் இத்தகைய சிறப்பை காண இயலாது என்பதால் இந்த விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்திற்கு வருவார்கள்.
சிதம்பரம் சிற்றம்பலம்
சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு.
சிதம்பர ரகசியம்
சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் தங்கத்தால் ஆன வில்வத்தள மாலை தொங்கும் காட்சியைப் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும். எனவேதான் பார்க்க முக்தி தரும் தில்லை என்கிறார்கள். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாகும்
சிதம்பரம் கோவில் சிறப்பு
சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர். இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது.