

இமயமலையில் அமர்நாத் கோவில்
தெற்கு காஷ்மீரில் இமயமலை பகுதியில் அமர்நாத் குகைக் கோவில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான இந்த புனித தலம், கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அமர்நாத் புனித யாத்திரை
இந்த கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்கலட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
பக்தர்கள் புனித யாத்திரை
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரியமான 48 கி.மீ. தூர நுன்வான்-பஹல்காம் வழித்தடம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய ஆனால் செங்குத்தான 14 கி.மீ. தூரபல்தால் வழித்தடம் மூலமாக இந்த புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை பஹல்காம், பல்தால் அடிவார முகாம்களில் இருந்து இன்று தொடங்கியுள்ளது.
புனித பயணத்தை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
4,800 பேர் புனிதப் பயணம்
ஹர ஹர மகாதேவ் உள்ளிட்ட பக்தி முழக்கங்களுக்கு மத்தியில்,பனி லிங்கத்தை தரிசிக்க முதற்கட்டமாக 4,800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.
பெண்கள், சாதுக்கள் யாத்திரை
முதல் குழுவில் 816 பெண்கள், சாதுக்கள் உட்பட மொத்தம் 4,822 பக்தர்கள் இடம் பெற்றுள்ளனர். 57 நாட்கள் நீடிக்கும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 28ம் தேதி நிறைவடையும்.
3.90 லட்சம் பேர் பதிவு
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை செல்வதற்கு 3.90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், பக்தர்கள் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதிக்காக அனைத்து பக்தர்களுக்கும் R.F.I.D. கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
பனி லிங்கத்தின் சிறப்பு
அமர்நாத் குகையில் இயற்கையாக உறைந்த பனியால் உருவாகும் சிவலிங்கம் ‘அமர்நாத் லிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. குகையின் மேற்பகுதியில் இருந்து சொட்டும் நீர் உறைந்து இந்த லிங்கத்தை உருவாக்குகிறது.
இது பார்வதி மற்றும் விநாயகரைக் குறிக்கும் சிறிய பனி வடிவங்களோடு சேர்ந்து அமைகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் (ஸ்ரவண மாத பௌர்ணமி) மாதம் வரையிலான கோடைக்காலத்தில் இந்த லிங்கம் அதிகபட்ச அளவை அடைகிறது
----------