

மார்கழியில் திருப்பாவை பாடல்கள்
Tamil hymns from Thiruppavai chanted at Tirupathi during Margazhi month : வைணவ ஆலயங்களில் மார்கழி மாதத்தின் போது ஆண்டாள் அருளிய திருப்பாவையை அதிகாலையில் பாடி இறைவனை துயில் எழுப்புவது வழக்கம். நாள்தோறும் ஒரு பாடல் வீதம் 30 நாட்களும் 30 பாடல்கள் பாடப்படும்.
வைணவ கோவில்களில் அதிகாலையில் பாடப்படும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக, திருப்பாவையில் உள்ள 30 பாசுரங்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக பாடுவதை கடைபிடித்து வருகின்றனர்.
திருமலையில் ஆண்டாள் பாசுரங்கள்
அதன்படி உலகப் புகழ்பெற்ற திருப்பதி - திருமலை ஏழுமலையான் கோவிலிலும், வழக்கமாக அதிகாலையில் இறைவனை எழுப்ப பாடப்படும் சுப்ரபாதத்திற்கு பதிலாக, ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரத்தை பாடி மலையப்ப சுவாமியை துயில் எழுப்புவார்கள். இந்த மாதம் முழுவதும் இது நடைமுறையில் இருக்கும்.
மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் திருப்பாவையில் உள்ள ஒவ்வொரு பாசுரமாக பாடி ஏழுமலையானை துயில் எழுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏழுமலையான் முன்பு திருப்பாவை ஓதல்
ஆந்திராவில், மாதங்களில் புனிதமான மார்கழி மாதம் நேற்று பிற்பகல் 1.23 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் சுப்ரபாத சேவை தொடங்கியது.ஜனவரி 14ம் தேதி வரை ஏழுமலையான் சன்னதி முன்பு பாராயணம் செய்யப்படும். இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஏகாந்த சேவையில் கிருஷ்ணர் சிலை
அதேபோல், ஏழுமலையான் கோயிலில் இரவு ஏகாந்த சேவையின்போது, போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு பதிலாக கிருஷ்ணர் சிலையை ஊஞ்சலில் வைத்து ஏகாந்த சேவை நடத்தப்படும். மற்றொரு தனித்துவமான அம்சமாக ஏழுமலையானுக்கு வில்வ இலைகளால் சஹஸ்ர நாமார்ச்சனை செய்யப்படும்.
ஏழுமலையானுக்கு கிளி மாலைகள்
அதேபோல், ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் கிளி மாலைகள் அணிவித்து அலங்கரிப்படுவது குறிப்பிடத்தக்கது.
=====================