

திருப்பதி ஏழுமலையான் கோவில்
Tirupati Perumal Darshan : பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெருமாளை சேவிக்க நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை எப்போதும் திருமலையில் கூட்டம் அலைமோதும். அதுவும் விழாக்காலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
இப்போது கோடை விடுமுறை என்பதால், ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பெருமாளை சேவிக்க 30 மணி நேரம் கூட ஆகிறது.
இருந்தாலும், எந்தவித தளர்ச்சியோ, அதிருப்தியோ இல்லாமல், பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருந்து, பெருமாளை வழிபட்டு, நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.
பொது பக்தர்களுக்கு குட்நியூஸ்
இந்தநிலையில் தான், திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பொதுப் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மிகப்பெரிய நல்ல செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.
ஏற்கனவே பொதுமக்களுக்கு விரைவாக தரிசனம் வழங்கும் வகையில் விஐபி பிரேக் தரிசனம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தினமும் சுமார் 90 ஆயிரம் பேர் பெருமாளை வழிபட்டு செல்ல முடிகிறது.
ஸ்ரீவாரி அபிஷேக சேவையிலும் சாமான்யர்கள்
இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீவாரி அபிஷேக சேவை நடைபெறும் நேரத்திலும் பொது பக்தர்களுக்கு தரிசனம் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.
இதுவரை அபிஷேக சேேவைக்காக பணம் கட்டியவர்கள் மட்டுமே, அப்போது தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த மாற்றத்தின் போது, அபிஷேகம் நடைபெறும் போது, பொது பக்தர்களுக்கும் வழிபட முடியும்.
கூடுதலாக 15,000 பேர்
இதன் மூலம் தினமும் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அபிஷேக சேவை நேரத்தில் மட்டும் 5 ஆயிரம் சர்வ தரிசன பக்தர்களுக்கு வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
AI கட்டளை கட்டுப்பாட்டு மையம்
பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க திருமலையில் புதிய AI கட்டளை கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் ஒவ்வொரு மணிநேரத்திலும் வரிசை நிலை மற்றும் பக்தர்கள் எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது.
அதன்படி தரிசன அனுமதிகள் மாற்றப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த AI தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு தரிசன நேரம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பக்தர்கள் வரவேற்பு மகிழ்ச்சி
இதனால், பக்தர்களும் சிரமம் இன்றி, தங்கள் நேரம் வரும் வரை காத்திருந்து பெருமாளை வழிபட்டு அவரது அருளை பெற்றுச் செல்கின்றனர்.
==================