

தமிழக வெற்றிக் கழகம் :
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய விஜய், மாநாடு, பொதுக்குழு, செயற்குழு என அடுத்தடுத்து அரசியலில் களமாடி வருகிறார். மக்கள் பிரச்சினைகளுக்கு அறிக்கை மூலம் குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு விழுப்புரம் அருகே தவெகவின் முதல் மாநாட்டை நடத்தி காட்டிய அவர், அடுத்த ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு மதுரையில் நாளை 2வது மாநில மாநாட்டை நடத்துகிறார்.
தவெக 2வது மாநில மாநாடு :
மதுரை அருகே அருப்புக்கோட்டை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை நடக்கிறது. இதற்கான பிரமாண்ட மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முடிந்து மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர், ரசிகர்கள் வருகையும் தொடங்கியுள்ளது.
100 அடி உயர கொடிக் கம்பம் :
இந்நிலையில், மாநாடு தொடங்கும் முன்பு மேடையில் இருந்தபடி ‘ரிமோட்’ மூலம் 100 அடி உயரக் கம்பத்தில் கட்சியை கொடியை கட்சியின் தலைவர் விஜய் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக 1,000 கிலோ எடை கொண்ட 100 அடி உயர இரும்பு கொடிக் கம்பம் தயாரிக்கப்பட்டது. நேற்று முதலே கொடிக் கம்பம் நடும் பணி நடைபெற்று வந்தது.
முறிந்து விழுந்த கொடிக் கம்பம் :
ஆழமான குழியின் மேல் சிமெண்ட் கான்கிரீட்டில் பொருத்திய இரும்பு நட்டுகளில் கிரேன் மூலம் கொடிக் கம்பத்தை தூக்கி நிமிர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடிப்பகுதியில் இரும்பு நட்டுகளில் பொருத்தும் போது, எதிர்பாராதவிதமாக திடீரென கம்பத்தில் கட்டியிருந்த நாடா கயிறு அறுந்து ஒரு பக்கமாக சாய தொடங்கியது.
கார் மீது விழுந்தது :
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அருகில் இருந்த பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அப்பகுதியை விட்டு விலகி ஓடினர். கொடிக் கம்பம் சாய்ந்து அப்பகுதியில் நின்றிருந்த கார் மீது விழுந்து வளைந்தது. இதில் அந்தக் காரின் மேல் பகுதி முழுவதும் சேதமடைந்தது. ஆட்கள் இல்லாத திசையில் கம்பம் விழுந்ததால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தொண்டர்கள், பொதுமக்கள் அச்சம் :
மாநாட்டு திடலைக் காண சென்றிந்த கட்சியினருக்கும், பொதுமக்களும் இதை பார்த்து அச்சம் அடைந்தனர். உடனடியாக இதே போன்றதொரு கொடிக் கம்பத்தை உடனே ஏற்பாடு செய்ய முடியாது என்பதால், மாற்று ஏற்பாடு குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.
=====