

தமிழகத்தில் தொழில் தொடங்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ரூ.1,614 கோடி மதிப்பிலான முதலீடு ஆந்திர பிரதேசத்திற்கு சென்றுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் ஆந்திராவில் தொழிற்சாலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
தமிழகத்துடன் ஏற்கெனவே தொழில் தொடர்பு கொண்டிருந்த இந்த நிறுவனங்கள் ஆந்திராவைத் தேர்வு செய்ததன் பின்னணி என்ன .
தமிழகத்தில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்திய ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்குத் தொடர்புடைய தென்கொரிய உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1,614 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.
Hwashin, Seoyon, Iwamet ஆகிய மூன்று நிறுவனங்களும் அனந்தபூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை அமைக்க உள்ளன.
இதன் மூலம் சுமார் 1,418 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதலீட்டை ஆந்திராவுக்குக் கொண்டு வருவதில் அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷின் முயற்சி முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் தென்கொரியாவுக்குச் சென்ற அவர், அங்குள்ள தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆந்திராவில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து ஆந்திர அரசின் பொருளாதார மேம்பாட்டு வாரியமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த மூன்று நிறுவனங்களும் தமிழகத்திற்குப் புதிய நிறுவனங்கள் கிடையாது. Hwashin, Seoyon ஆகிய நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே தொழில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.
Iwamet நிறுவனமும் தமிழகத்தில் தனது நிறுவனத்தைப் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தங்களது தொழிலை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இந்த நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஏற்கெனவே தொழில் தொடர்பு வைத்திருந்த நிறுவனங்களின் புதிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றிருப்பது அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதலீடுகளைத் தக்கவைக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன, நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகள் ஏன் முதலீட்டு ஒப்பந்தமாக மாறவில்லை போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இருப்பினும், இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை மூடிவிட்டு ஆந்திராவுக்குச் செல்லவில்லை.
====================