

Dengue Spikes in TN: 244 New Cases Reported in a Single Day
தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேருக்கு புதிதாக டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரங்களும் சென்னை நிலவரமும்
நடப்பாண்டில் இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 16,577 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (செப். 17) ஒரே நாளில் 1,320 பேருக்குக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதில், 244 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தலைநகர் சென்னையில் நேற்று ( செப்.17) 156 பேருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதில் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
அதிக பாதிப்புள்ள 10 மாவட்டங்கள்
சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகளவில் உள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தீவிர கொசு ஒழிப்புப் பணிகள்
மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரத் தடுப்புப் பணிகளில் 25,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்
பொதுமக்கள் யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று முன்னெச்சரிக்கையாகப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
DengiAll: சாதிக்கவிருக்கும் இந்தியா
முன்னதாக டெங்கு நோய்க்கு எதிராக, இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள DengiAll தடுப்பூசி மருத்துவ உலகையே தற்போது திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
4 வகை வைரஸ்களுக்கு தடுப்பூசி
டெங்குவை உண்டாக்கும் DENV-1 முதல் DENV-4 வரையிலான 4 வகை வைரஸ்களுக்கும் எதிராக ஒரே நேரத்தில் வீரியமாக செயல்படும் இந்தத் தடுப்பூசியின் மிகப்பெரிய சிறப்பம்சமே, வாழ்நாளில் ஒரே ஒரு டோஸ் மட்டும் போட்டால் போதும் என்பதுதான்.
பனாசியா பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் இணைந்து உருவாக்கியுள்ள இத்தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் 10,000-க்கும் மேற்பட்டவர்களிடம் வெற்றிகரமாத் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இதையும் படிங்க : டெங்குவுக்கு இனி ஒரே ஒரு ஊசி தான்! இந்தியாவின் 'டெங்கிஆல்' தடுப்பூசி: மருத்துவ உலகமே எதிர்பார்க்கும் மாபெரும் புரட்சி!
=====