

பத்திரப்பதிவில் முக்கிய மாற்றம்
Patta Chitta Land New Procedure Update in Tamil Nadu : தமிழகத்தில் நிலம் மற்றும் வீடு தொடர்பான மோசடிகளைத் தடுக்கும் வகையில், பத்திரப்பதிவு மற்றும் பட்டா நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, விற்பனை பத்திர எண், சொத்தின் நான்கு எல்லைகள் மற்றும் உரிமையாளரின் ஆதார் எண் போன்ற முக்கிய விபரங்களை பட்டாவில் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
பட்டாவில் விவரங்கள்
தற்போது பட்டாவில் மாவட்டம், தாலுகா, கிராமம், நில உரிமையாளர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவு மற்றும் நில வகைப்பாடு போன்ற அடிப்படை விபரங்கள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன.
பட்டாவில் கூடுதல் விபரங்கள்
இந்த வடிவமைப்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். ஆனால், இன்றைய சூழலில் நில பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளதால், கூடுதல் விபரங்கள் சேர்க்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பொதுமக்கள் வரவேற்பு
முன்பு பட்டா பெற்ற நபர் அந்த சொத்தை விற்கும் சம்பவங்கள் அரிதாக இருந்ததாகவும், தற்போது ஒரே நிலம் பலமுறை கைமாறுவதால் பட்டா மற்றும் பத்திர விபரங்களில் குழப்பங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பட்டாவில் ஆதார் எண்
எனவே, பட்டாவில் பத்திர எண், சொத்தின் எல்லைகள் மற்றும் ஆதார் எண் போன்ற விபரங்கள் இடம்பெற்றால், சொத்து உரிமை தெளிவாகி மோசடிகள் தவிர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், பட்டாவின் வடிவமைப்பை மாற்றி அதில் கூடுதல் விபரங்களை சேர்ப்பது அவசியம்.
மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி
இதற்கான பணிகளைத் தொடங்க நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், நிலப் பதிவுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து, நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டாவில் உள்ள விபரங்களை பத்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கும்போது, பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால், பட்டாவின் வடிவமைப்பை மாற்றி, சொத்தின் நிலை, பயன்பாடு, உரிமை தொடர்பான தெளிவான விவரங்கள் பட்டாவில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது நினைவு கூரத்தக்கது.
=========================