அழகர் கோவில் ஆடி தேரோட்டம் 2025 : வடம் பிடித்து பக்தர்கள் பரவசம்
அழகர் கோவில் ஆடித் திருவிழா :
Alagar Kovil Aadi Therottam 2025 in Madurai : திருவிழா நகரமான மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா பெயர் போனது. அதற்கு இணையானது மதுரை அழகர் கோவிலில் ஆடி மாத திருவிழா மற்றும் தேரோட்டம். பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவார்கள்.
அழகர்மலை ஆடித் தேரோட்ட சிறப்பு :
மற்ற கோவில்களில் நடைபெறும் திருத்தேரோட்டம் நிகழ்வை போல் இல்லாமல் அழகர் கோவில்(Alagar Temple) தேரோட்டத்திற்கு தனிச் சிறப்பு உள்ளது. கோவிலின் வெளிப்புற கோட்டை சுவரை சுற்றி தேர் வலம் வந்தாலும், அப்படி வருவதற்கு ஒருவர் வந்தால்தான் தேர் நகரவே ஆரம்பிக்கும்.
ஜமீன் வந்தால் தேர் நகரும் :
அவர்தான் வெள்ளையங்குன்றம் அரண்மனை ஜமீன். பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் இருந்து வெள்ளையர் ஆட்சி காலம் வரை அழகர் கோவிலுக்கு கணக்கு பிள்ளையாக இருந்து திருவிழாக்களை முன் நின்று நடத்தியது இவர் பரம்பரைதான். எனவே, அவருக்கு மரியாதை செலுத்தக் கூடிய வகையில், அந்தக் காலத்து உடையுடன் ஜமீன் வந்து, தேங்காய் உடைத்த பிறகே தேர் நகர ஆரம்பிக்கும்.
வடம்பிடிக்கும் 18 பட்டி மக்கள் :
அதேபோல் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால்,இத்தேரின் வடம் பிடித்து இழுப்பதற்கு என்றும் ஒரு மக்கள் உள்ளனர். திருத்தேரில் நாலு வடம் இருக்கக்கூடிய நிலையில், 18 பட்டிகளை கொண்ட கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்கள், கோவிலால் பரிவட்டம் கட்டப்பட்டு,திருத்தேரின் வடத்தை இழுக்க ஆரம்பிப்பார்கள். அதுவும் நான்கு வட்டத்தையும் 18 பட்டிகளை கொண்ட நான்கு ஊரைச் சேர்ந்த கிராமத்தினர் இழுப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தினர் தேரில் நின்று வல்லத்தை வீசுவார்கள்
பாரம்பரியம் மாறாமல் தேரோட்டம் :
பாண்டியர் காலத்தில் எவ்வாறு அழகர் கோவிலின் ஆடித்திரு தேரோட்டம்(Alagar Kovil Aadi Therottam 2025) நிகழ்வு நடைபெற்றதோ அதேபோல் தற்பொழுது வரை பரம்பரை பரம்பரையாக பழமை மாறாமல் அதே வழியில் ஆடித்திருத்து தேரோட்டம் நிகழ்வு நடைபெறுவது சிறப்பம்சம்.
சிகர நிகழ்ச்சியான ஆடித் தேரோட்டம் :
அழகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம்(Aadi Therottam 2025) இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகர் தேரில் எழுந்தருளினார். திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி கிராம பொதுமக்கள் ஊர் பங்காளிகள் வருகை தந்து தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் படிக்க : Aadi Pooram : ஆடிப்பூர நாளின் மகத்துவம்: அருள் வழங்கும் ஆண்டாள்
கோவிந்தா, கோவிந்தா பக்தர்கள் பரவசம் :
பக்தி முழக்கங்களுடன், பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்றது காண்பேரை மெய் சிலிர்க்க வைத்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர்.
=====