

கோயம்புத்தூரில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூலகம் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல என்றும், பொருளாதார வசதியில்லாத மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு அறிவையும் வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் பொதுச் சொத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நூலகத்துக்குப் புத்தகங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுப் பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா?
கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்தவர்கள் யார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை மட்டுமல்ல; அறிவுக் கொள்ளை என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முறைகேட்டுக்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
====================