

ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பேச்சு
Actor Rajinikanth respond to Aadhav Arjuna Remarks : சென்னையில் தவெக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மூத்த நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, “எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார்.
ரஜினிக்கு திமுக குடும்பம் மிரட்டல்?
ஆனால் இதே திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்தது. அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது. அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார்.
விஜய் மனவலிமை மிக்கவர்
ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் மிரட்டலை சமாளிக்கும் மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது” என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.
தலைவர்கள் எதிர்ப்பு
இதற்கு மறுப்பு தெரிவித்து திமுக விளக்கம் கொடுத்த நிலையில், ரஜினி ரசிகர்களும் தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
ரஜினிகாந்த் அறிக்கை
இந்தநிலையில், ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரஜினிகாந்த் அறிக்கை மூலம் பதிலடி கொடுத்து இருக்கிறார். இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னை பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்
ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுன மூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் ஆகியோருக்கும்...
புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத் துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் பேசாது, பதில் சொல்லும்
“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
==========================