

புலி படம் - விஜய் சம்பளம்
Actor cum Politician Vijay’s Tax Penalty Case Verdict : 2015 ஆம் ஆண்டு வெளியான புலி படத்தில் நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தை கணக்கில் காட்டவில்லை என்றும் அதனால் புலி படத்திற்காக அவர் பெற்ற சம்பளப் பணமான 15 கோடியில் இருந்து 10 சதவீதம் அதாவது 1.50 கோடியை அபராதமாக கட்ட வேண்டும் என்றும் வருமான வரித்துறை உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் விஜய் தரப்பு
ஆனால் இதனை மறுத்த விஜய் தரப்பு அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
அபராதம் செல்லும் - நீதிமன்றம் தீர்ப்பு
நடிகர் விஜய் தரப்பில் தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த 1.50 கோடி அபராதம் செல்லும் என்று கூறி உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விவரங்களை விரிவாகக் காணலாம்
புலி திரைப்படம்
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புலி. பாகுபலி திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அதேபோன்று புலி திரைப்படமும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் பிரம்மாண்ட படமாக அமையும் என்று படக்குழு எதிர்பார்த்த நிலையில் புலி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடைவில்லை. ஏமாற்றத்தை தழுவியது.
புலி படம் தொடர்பான பிரச்னை
2015 ஆம் ஆண்டு புலி தோல்வியைத் தழுவியதை அடுத்து 2015-2016ஆம் ஆண்டிற்கான வருமான வரித்துறை கணக்கை விஜய் தாக்கல் செய்திருந்தார்.
அதில் அந்த ஆண்டில் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் வருமானமாக பெற்றிருந்ததாக குறிப்பிட்டுருந்தார். இதைத்தொடர்ந்து வருமான வரித்துறையினர் விஜயின் வீட்டில் நடத்திய சோதனையில் தாங்கள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் புலி படத்திற்கு என விஜய் 15 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் ஆனால் அதை மறைத்து அந்த வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்றும் கூறியது.
விஜய்க்கு 1.50 கோடி அபராதம்
இதைத்தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் தனது வருமாணத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வருமான வரித்துறையின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
விஜய் தரப்பு வாதம்
வருமான வரித்துறையின் அபராத விதிப்பு உத்தரவிற்கு எதிராக விஜய் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், வருமான வரித்துறையினர் 2019 ஆம் ஆண்டு சோதனை நடத்தினர்.
ஆனால் 2022 ஆம் ஆண்டில் தான் அபராதம் விதித்தனர். சோதனை செய்த ஆண்டிலேயே அபராதம் விதிக்காமல் மூன்று ஆண்டுகள் கழித்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் இது தவறாக உள்ளதாகவும் இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தங்களது வாதத்தை தொடர்ந்து முன்வைத்தது.
உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
இந்த நிலையில் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், விஜய் தனது வருமானத்தை மறைத்ததால் தான் வருமான வரித்துறை அபராதத்தை விதித்துள்ளது.
மேலும் சோதனை நடத்திய அதே ஆண்டில் தான் அபராதம் விதிக்க வேண்டும் என்றில்லை காலம் கடந்து அபராதம் விதித்தாலும் அது செல்லும். இதில் எந்த விதிமீறலும் இல்லை என்று கூறியுள்ளது.
மேலும் விஜக்கு விதிக்கப்பட்ட 1.50 கோடி அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
====