
யாருக்கும் பாதுகாப்பு இல்லை :
Edappadi Palanisamy in ADMKs Anna Birthday Meeting 2025 : அதிமுக சார்பில் சென்னையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”ஒரு வாரத்திற்கு முன்பு, சென்னை டிஜிபி அலுவலகம் முன்பே ஒருவரை கடுமையாக தாக்கினர். இப்போது தாக்கப்பட்டவர் மீதே வழக்கு போட்டு, சிறையில் அடைத்துள்ளனர். திமுக ஆட்சியில் போலீசுக்கும் பாதுகாப்பு இல்லை. கடந்த ஆறு மாதங்களில், ஆறு காவலர்கள் கொல்லப்பட்டனர்.
சட்ட விரோத செயல்கள், துணை போகும் திமுக :
சென்னை நொளம்பூர் ரோந்து காவலரை போதை கும்பல் தாக்கியுள்ளது. திமுக ஊராட்சித் தலைவர் ஒருவர், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் விற்பனைக்கு பெரும்பாலும் திமுகவினரே துணை நிற்பதாக தகவல் வருகிறது. சட்டம் - ஒழுங்கை காப்பதில், இந்த அரசு தள்ளாடி வருகிறது. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பந்தப்பட்ட அந்த சார் யார் என்பது, அதிமுக ஆட்சியில் கண்டுபிடிக்கப்படும்.
எங்கும், எதிலும் ஊழல் தான் :
திமுக ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. மதுரை மாநகராட்சி வரி வசூலில், 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. ஆடு, மாடு, பன்றிக்கு கூட வரி போட்டு இருக்கிறார்கள். பன்றி வரியிலும் ஊழல் செய்து இருக்கிறார்கள். மதுரை மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்மானமே எங்களுக்கு முக்கியம் :
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நான் சந்தித்து, உட்கட்சி பிரச்சினை பற்றி பேச போவதாக சிலர் பேசி வருகிறார்கள். அதிமுகவை யாராலும் எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட, தன்மானம் தான் முக்கியம்.
திருந்தாதவர்களை எப்படி சேர்க்க முடியும்? :
சிலரை கைக்கூலியாக வைத்துக் கொண்டு சிலர் ஆட்டம் போடுகின்றனர். அந்தக் கைக்கூலி யார் என்பதை அடையாளம் காட்டி விட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஓட்டு போட்டவர்களை மன்னித்து, துணை முதல்வர் பதவி கொடுத்தோம். ஆனாலும் திருந்தாமல், அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்; அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமா? அதிமுக ஆட்சியை கவிழ்க்க, 18 எம்எல்ஏக்களை கடத்திச் சென்றவரை எப்படி மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்வது
மிரட்ட முடியாது, நன்றி மறவோம் :
நான் தொண்டனாக இருந்து உயர்ந்தவன், யாருக்கும் அஞ்ச மாட்டேன், யாரும் என்னை மிரட்டிப் பார்க்க முடியாது. ஜெயலலிதா மறைவுககு பின்பு சிலர், அதிமுகவை கபளீகரம் செய்யவும், ஆட்சியை கவிழ்க்கவும் பார்த்தனர். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் அதை காப்பாற்றி கொடுத்தனர். அதனால், நன்றி மறவாமல் இருக்கிறோம். எதிரிகளை வீழ்த்துவதற்கே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
மேலும் படிக்க : ’தொண்டர்களின் குரலாய்’ செங்கோட்டையன் : ஓபிஎஸ் வரவேற்பு, உற்சாகம்
தோல்வி பயத்தில் திமுக :
அதிமுக - பாஜக கூட்டணி(ADMK BJP Alliance) அமைந்ததும், திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனாலேயே ஏதேதோ பேசி வருகின்றனர். மத்தியில் ஆட்சி செய்பவர்கள், இன்று வரை நமக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. இது அனைவருக்கும் தெரியும்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
====