

கோவையில் அரங்கேறும் தொடர் சம்பவம்
Edappadi Palanisamy on Women Safety in Tamil Nadu : கோவை விமான நிலையம் அருகில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளை, காவல்துறையினர் சுட்டுபிடித்துள்ள நிலையில், இதற்கான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த சம்பவத்திற்கான தீர்வு கிடைப்பதற்குள், மற்றுமொரு சம்பவமாக கோவையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை காரில் கடத்தியுள்ளது என கோவையில் நடந்தேறும் தொடர் சம்பவங்கள், தமிழக பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு
அதாவது, கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியல் பெண்களின் பாதுகாப்பு Compromise செய்யப்பட்டுள்ளது
கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளை பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக Compromise செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சியின் மீது குற்றவாளிகளுக்கு அச்சமே இல்லை
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்
மேலும், எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த விடியா அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.
வெட்கித் தலைகுனிய வேண்டாமா
திரு. எம்.கே. ஸ்டாலின் அவர்களே - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள நீங்கள், தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் மேற்கூறிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணையை துரிதப்படுத்தி, பெண்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.