

அதிமுகவில் குழப்பம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வரான ஓ. பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்தியதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டதால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.
எடப்பாடி கை ஓங்கியது
கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வந்த எடப்பாடி, சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓரம் காட்டினார். பாஜகவின் முயற்சியால், ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்து, துணை முதல்வரானார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவ, எடப்பாடி - ஒபிஎஸ் பிரிந்தனர். கட்சியில் இருந்து ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.
சசிகலாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு
சசிகலா, தினகரனை ஓருபோதும் அதிமுகவிற்குள் சேர்க்க முடியாது என்பதில், எடப்பாடி உறுதியாக இருந்தார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டிய நிலை வந்தது.
அதிமுக கூட்டணியில் தினகரன்
ஆம், தினகரனின் அமமுக கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்தது. அப்போதும் சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.
47 இடங்களில் அதிமுக வெற்றி
சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக, 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. விஜய் தலைமையிலான தவெக கூட்டணி 108 தொகுதிகளை வென்று, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.
அதிமுக - திமுக கூட்டணி ஆட்சி?
அதற்கு முன்பு, அதிமுக - திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க போவதாகவும், எடப்பாடி முதல்வராவார் என்று பரவலாக பேசப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பில் எந்த மறுப்பு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
25 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு
இதனிடையே தவெகவை ஆதரிக்க அதிமுகவின் ஒரு பிரிவு முடிவு எடுத்தது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்தனர்.
எடப்பாடி தரப்பு எதிர்ப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இவர்கள் தவெக அரசை ஆதரிக்க, எடப்பாடி தலைமையில் 22 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
வேலுமணி ஆதரவாளர்கள் நீக்கம்
அதிருப்தி எம்எல்ஏக்களின் கட்சி பதவியே பறித்து அதிரடி காட்டி இருக்கிறார் எடப்பாடி. அவருக்கு அதிகாரம் இல்லை என்று போர்க்கொடி உயர்த்தி இருக்கிறது வேலுமணி தரப்பு
திருப்பத்தை நோக்கி அதிமுக
மேலும், சசிகலா, தினகரனை கட்சிக்குள் சேர்த்து ஒன்றுபட்ட அதிமுகவை அமைக்கவும் வேலுமணி தரப்பு குரல் கொடுக்க தொடங்கி இருக்கு. இதனால் "யாரும் எதிர்பார்க்காத திருப்பம்" என்பது அதிமுகவில் அரங்கேறத் தொடங்கியுள்ளது.
எடப்பாடி, வேலுமணி தனி அணியாக செயல்பட, அதிமுக பிளவோடு நிற்குமா அல்லது எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தோடு, இடைத்தேர்தலை சந்திக்குமா என்ற சந்தேகமும் வலுத்து இருக்கு.
அதிமுகவில் மீண்டும் சசிகலா?
"சின்னம்மா வேண்டும்; டிடிவி தினகரன் எனப் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என எஸ்.பி. வேலுமணி விடுத்த அழைப்பு, எடப்பாடி தரப்பிற்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
எடப்பாடிக்கு பேரிடி
"தனி நபர் பிடிவாதத்தால் இயக்கம் பலவீனமடைவதை அனுமதிக்க முடியாது" என்று வேலுமணி மற்றும் சிவி சண்முகம் அணி போர்க்கொடி தூக்கியிருப்பது, இபிஎஸ் ஒற்றைத் தலைமைக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை.
"வனவாசம் முடிகிறதா?"
சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என்று கணக்கு போட்டவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக அவர் பக்கம் சாய்வது தெரிய தொடங்கி விட்டது.
சசிகலா சூசகம்
"ஒருவரின் பிடிவாதம் முடிவுக்கு வந்து விட்டது; இனி ஒற்றுமை பிறக்கும்" என சசிகலா விடுத்த செய்தியும் புதிய தகவல்களை தருவது போல இருக்கிறது.