

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரங்கள் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு செல்லவுள்ளார். அங்கு அவர் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்பயணம் குறித்து தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத்தும், கர்நாடகத் துணை முதல்வர் ஜி. பரமேஷ்வராவும் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகி உள்ளது.
எம்.ஜி.ஆருக்குப் பின் முதல்வர் விஜய்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு காவிரி விவகாரத்திற்காகத் தமிழக முதல்வர் ஒருவர் நேரில் கர்நாடகம் செல்வது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
வெடிக்கும் அரசியல் எதிர்ப்புகள்
முன்னதாக காவிரிப் பிரச்சனையில் கர்நாடக முதல்வரை நேரில் சென்று சந்திப்பதால் எவ்விதத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்றும், இதனால் முதல்வர் விஜய் கர்நாடகம் செல்லக்கூடாது என்றும் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின்,
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆரை அடுத்து திரும்புமா வரலாறு?
காவிரிப் பிரச்சனைக்காக கர்நாடகாவிற்கு பேச்சுவார்த்தை நடத்தச் செல்வது தமிழக அரசியல் வரலாற்றில் இது முதன்முறையல்ல.
அமைச்சர்களை கர்நாடகா அனுப்பிய எம்.ஜி.ஆர்
1980 கால கட்டத்தில் நிலவிய கடுமையான வறட்சியின் போது சம்பா பயிர்களைக் காப்பாற்ற, அப்போதைய முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 1986 ஜனவரி மற்றும் 1987 பிப்ரவரி மாதங்களில் தனது அமைச்சர்களை பெங்களூருவுக்கு அனுப்பி அன்றைய கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்தார்.
அமைச்சர்களின் பயணமும் கோரிக்கையும்
1986 பிப்ரவரியில் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் ப.உ. சண்முகம் மற்றும் ஒய்.எஸ்.எம். யூசுப் ஆகியோர் பெங்களூரு சென்று 10 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.
மின்சாரப் பரிமாற்ற ஒப்பந்தம்
1987-ல் அப்போதைய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எச்.டி. தேவே கௌடாவை சந்தித்துப் பேசினார்.
அப்போது வறட்சி நிலவியதால், தண்ணீர் திறப்பதற்கு ஈடாகத் தமிழகத்தில் இருந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை தேவே கௌடா முன்வைத்தார். எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முந்தைய முதல்வர்களின் அணுகுமுறை
எம்.ஜி.ஆர் நேரடியாகவும் அமைச்சர்கள் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவருக்குப் பின்வந்த முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் சட்டப் போராட்டங்கள் மூலமாகவே காவிரி நீருக்கான உரிமைகளைப் பெற்றனர்.
எதிர்பார்ப்பில் ஆகஸ்ட் 3 சந்திப்பு
வரலாற்று சம்பவங்களின் பின்னணியில், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள 'டி.கே. சிவக்குமார் - விஜய்' சந்திப்பில் காவிரி நீர் விவகாரத்தில் என்னென்ன முடிவுகள் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
=====