

The story behind the achievement of Sureshkumar, who secured admission to the MBBS course at the age of 51 after passing the NEET exam following a 34-year wait.
51 வயதில் மருத்துவக் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு தொடங்கிய நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 51 வயதான மாற்றுத்திறனாளி சுரேஷ்குமார் கலந்துகொண்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடத்தை தேர்வு செய்துள்ளார்.
நீட் தேர்வு மூலம் நனவான கனவு
1992-ல் பள்ளிக் படிப்பை முடித்த சுரேஷ்குமாருக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன் காரணமாக ஸ்டெதஸ்கோப்பை வாங்கி வைத்திருக்கிறார். ஆனால் குடும்பச் சூழல் காரணமாக பார்மசி பணிக்கு சென்ற அவர், தற்போது வரை இரண்டு முனைவர் பட்டங்களை முடித்த்துள்ளார்.
தற்போது, வயது வரம்பு இல்லாததால் 2026 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது 34 ஆண்டு கால கனவை நனவாக்கியுள்ளார்.
குடும்பத்தின் முழு ஆதரவு
தனது மருத்துவப் படிப்பிற்கு மனைவி துர்கா மற்றும் உறவினர்கள் முழு உறுதுணையாக இருந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சொந்த ஊருக்குச் செல்லும் நோக்கில் நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார்.
விபத்தும் மாற்றுத்திறனாளி இடஒதுக்கீடும்
தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக மாற்றுத்திறனாளி பிரிவில் இந்த வாய்ப்பு கிடைத்ததாக சுரேஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களுடன் இணைந்து படிப்பதன் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.
தொடரும் உயர்கல்வி இலக்கு
தன்னை எப்போதும் இளமையாகவே கருதுவதாகக் கூறும் சுரேஷ்குமார், எம்.பி.பி.எஸ். படிப்பைத் தொடர்ந்து மருத்துவ முதுகலைப் படிப்பையும் தொடர உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டில் மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டெதஸ்கோப்பை வாங்கிய சுரேஷ்குமாரின் கனவு தற்போது அவரது 51 வயதில் நிறைவேறியுள்ளது. சாதிக்க நினைத்தால் வறுமையும், வயதும் எப்போதும் தடையில்லை என்பதை மாற்றுத்திறனாளி சுரேஷ்குமார் நிரூபித்துள்ளார்.
======