
கோவை தொடர் குண்டுவெடிப்பு :
Coimbatore Serial Blast Case Update : 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கோவை வந்திருந்தார். ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு சந்திப்பில் அவர் பேச மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் கோவை நகரின் 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
58 பேர் பலி, 1,000 பேர் காயம் :
திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்புகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 58 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் படுகாயம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தை விசாரிக்கும் வழக்கு, கோவை மாநகர காவல்துறையிடம் இருந்து, சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தண்டிப்பு :
விசாரணைக்கு பிறகு, தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட, 166 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட்டனர். இன்னும் சிலர் சிறையில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை 2002 ல் தொடங்கியது. 1,300 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.
2007 ஏப்ரல் 10ம்தேதி விசாரணை முடிவடைந்து, பாஷா உட்பட 30 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாஷா கடந்த ஆண்டு சிறையில் இருந்து பரோலில் வந்த நிலையில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் மட்டும் போலீசில் சிக்காமல் தலைமறைவாகி விட்டனர்.
டெய்லர் ராஜா கைது :
இந்த நிலையில், தொடர் குண்டு வெடிப்பில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான டெய்லர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். பீஜப்பூரில் பதுங்கி இருந்த அவரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட டைலர் ராஜாவை போலீசார் கோவை அழைத்து வருகின்றனர். இதையொட்டி கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெய்லர் ராஜா பின்னணி :
தெற்கு உக்கடத்தில் உள்ள பிலால் காலனியை சேர்ந்த இவர், சாதிக் ராஜா என்றும் அழைக்கப்படுகிறார். 1996ல் நாகூரில் ஒரு கொலை வழக்கு, கோவை மற்றும் மதுரை காவல்நிலையங்களிலும் இவர் மீது கொலை வழக்குகள் உள்ளன.
வெடிகுண்டுகளை தயாரித்த டெய்லர் ராஜா :
1998ல் கோவை வள்ளல் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, வெடிகுண்டு தயாரித்து பதுக்கி வைத்திருந்தார். பிப்ரவரி 12, 13 மற்றும் 14ம் தேதிகளில் அல் உமாவின் சில அமைப்புகளுக்கு இவர் வெடிகுண்டுகளை விநியோகம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். டெய்லர் ராஜா கைது செய்யப்பட்டது கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
====