150 கோடி வரி முறைகேடு : மதுரை மேயருக்கு எதிராக அதிமுக போர்க்கொடி

ADMK Protest on Madurai Corporation Property Tax Scam : மதுரையில் 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் பதவி விலகக் கோரி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ADMK Protest on Madurai Corporation Property Tax Scam
ADMK Protest on Madurai Corporation Property Tax Scam
1 min read

மதுரை மாநகராட்சி வரிமுறைகேடு :

ADMK Protest on Madurai Corporation Property Tax Scam : மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. இங்கு வணிக வளாகங்களுக்கு விதிக்கப்பட்ட வரி, நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாக வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதன் மூலம் 150 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், 8 பேரை கைது செய்தனர்.

மேயர் தலைமையில் மாநகராட்சி கூட்டம் :

இதில் திமுகவை சேர்ந்த மண்டல தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவி விலகினர். இந்தநிலையில், மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி(Madurai Mayor Indrani) தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

கருப்பு சட்டை அணிந்த அதிமுகவினர் :

மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டை கண்டித்து, கூட்டத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

மேயர் தீர்மானங்களை வாசிக்கத் தொடங்கியதும், மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள் எழுந்து, ‘“சொத்துவரி முறைகேடுக்கு பொறுப்பேற்றும், விசாரணை நியாயமாக நடப்பதற்கும் மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும்.” என்று கூறி கோஷமிட்டனர்.

மேயர் பதவி விலக முழக்கம் :

இதுகுறித்து சோலைராஜா பேசும்போது, “சொத்துவரி முறைகேடுக்கு மூளையாக இருந்த ரவி, மேயரின் நேர்முக உதவியாளராக இருந்த பொன்மேணியின் கணவர். அதனால், மேயரையும் இந்த விவகாரத்தில் விசாரிக்க வேண்டும்,” என்றார். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, “உங்கள் ஆட்சியில்தான் மாநகராட்சியில் அதிகம் முறைகேடு நடந்துள்ளது” என எதிர்ப்பு கோஷமிட்டனர்.

அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் :

தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள், மேயரை நோக்கிச் சென்றனர். அவர்களை திமுக கவுன்சிலர்கள் தடுத்து வாக்குவாதம் செய்ததால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேயர் இந்திராணி, “இந்த மாமன்றம் அரசியல் செய்வதற்கான இடமில்லை. உங்கள் அரசியலை வெளியே போய் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் பிரச்சினைகளை பேசுவதாக இருந்தால் மட்டும் இருங்கள், இல்லையென்றால் வெளியே செல்லுங்கள்.” என்று கூறி சபை காவலர்களையும், போலீஸாரையும் அழைத்து அவர்களை வெளியே அனுப்பும்படி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க : கிராம தொழில்களுக்கு வணிக உரிமம் : திமுக அரசுக்கு கடும் எதிர்ப்பு

அதிமுகவினர் வெளிநடப்பு :

போலீஸார் உள்ளே வந்ததுக்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், திமுக கவுன்சிலர்கள் பதிலுக்கு கோஷமிடவும் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பெரும் கூச்சலும், குழப்பமும் நீடித்தது. இதையடுத்து, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in