
அனல் பறக்கும் தமிழக களம் :
ADMK Edappadi Palanisamy Election Campaign : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. ஒரு பக்கம் திமுக வீடு வீடாக மக்கள் சந்திப்பை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மூலம் மக்களை சந்தித்து வருகிறார்.
‘உருட்டுகளும் திருட்டுகளும்’ :
இந்தநிலையில், புதுக்கோட்டையில், ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுகவின் புதிய பிரச்சாரத்தை எடப்பாடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி, நேற்றுவரை 46 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 15 லட்சம் மக்களை சந்தித்து இருக்கிறேன்.
அதிமுகவுக்கு அமோக வரவேற்பு :
பயணத்தின்போது மக்கள் அளித்த வரவேற்பு, அவர்களிடம் நான் கண்ட மகிழ்ச்சியும், ஆரவாரமும் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாங்கள் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது? அப்படியென்றால், முதல்வரும், அவரது மகனும் யார் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்?
அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை :
மக்களின் பிரச்சினைகள் தெரியாத அரசாக திமுக அரசாங்கம் உள்ளது. திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது. அப்படியான, நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல. ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ பிரச்சாரம் மூலம், திமுக செயல்படுத்தாத அறிவிப்புகள் குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்படும்.
வலுவான கூட்டணி அமையும் :
அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும். கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.